உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

இளங்குமரனார் தமிழ் வளம் 17

புறத்திரட்டுத் தொகுப்பில் ஆளப்பெற்ற மூல நூல்களைப் பற்றிய விளக்கம் ஒரு தனிப்பகுதியாக எழுதிச் சேர்க்கப் பெற்றுள்ளது. அதன்கண் நூற்பெயர்க்காரணம், பாடலளவு, ஆசிரியர் வரலாறு, காலம், நூற்சிறப்பு ஆகியவை வரலாறு, கல்வெட்டு ஆகிய பல்வேறு சான்றுகளுடன் ஆராய்ந்து சுருக்கமாகத் தரப்பெற்றுள்ளது.

ஆசிரியமாலை, இரும்பல் காஞ்சி முதலிய நூல்களைச் சேர்ந்து உரையுடன் வெளிப்படாத பாடல்களுக்குக் குறிப்புரை எழுதிச் சேர்க்கப் பெற்றுள்ளது. இவற்றாலும் இன்னோரன்ன பிறவற்றாலும் இப்பதிப்பின் சீர்மை புலனாம்.

புறத்திரட்டு முதற் பதிப்பைத் தமிழுலகுக்கு வழங்கிய பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கட்கும், தம் சீரிய பதிப்புக்களுள் ஒன்றாக வெளியிட்ட சென்னைப் பல்கலைக் கழகத்தார்க்கும், ஒப்புநோக்கி ஆராய்தற்குத் துணையாகப் பல்வேறு நூல்களைப் படைத்துதவிய நூலாசிரியர், பதிப்பாசிரியர், பதிப்பகத்தார் ஆகியவர்கட்கும், இன்றமிழ்த்தாய்க்கு எளியேனால் இயன்ற தொண்டுகளைச் செய்தற்குத் திருவருட்டுணையால் தூண்டுதலும் துணையுமாய் வாய்த்துள்ள தமிழ்ப் பெரியார், ‘பதிப்புத்துறைப் பகலவன்', 'தாமரைச் செல்வர்’ திருமிகு வ. சுப்பையாபிள்ளை அவர்கட்கும் பெரு நன்றியுடையேன்!

அருளகம்,

4-4-1972

வாழ்க தமிழ்!

தமிழ்த்தொண்டன், இரா. இளங்குமரன்.