உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டுத் தொகுப்புக்கு உதவிய

மூலநூற் குறிப்புக்கள்

1. அறநெறிச்சாரம்

ஆசிரியர் முனைப்பாடியாரால் செய்யப்பெற்ற அரிய அறநூல் அறநெறிச்சாரம் ஆகம். அறநெறியின் சாரமாகக் கருதப்பெறும் 226 வெண்பாக்களைத் தன்னகத்துக் கொண்ட நூல் இது.

சான்றோர் பலரைத் தாங்கிய திருமுனைப்பாடி நாடு இவ்வாசிரியரையும் பெற்றுப் பெருமிதம் உற்றிருக்கலாம் என்னுங் கருத்து இவர் பெயரை நோக்கப் புலப்படுதல் ஒருதலை. இவர் காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டு என்பர். “பூவின்மேல் சென்றான்” புகழடி யை வாழ்த்தி நூலைத் தொடங்குவதாலும், சமண்சமயக் கோட்பாடுகள் நூலிற் பயில அமைந்துகிடத்தலாலும் இவர் சமணராதல் வெளிப்படை.

1903ஆம் ஆண்டில் இந்நூல் மூலமட்டும் திரிசிரபுரம் திரு. தி.ச. ஆறுமுக நயினார் அவர்களால் வெளியிடப்பெற்றது. அதன் பின், சென்னை பச்சையப்பன் கல்லூரித் தலைமைத் தமிழாசிரியர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார் எம்.ஏ. அவர்கள், நூற்பாக்களைப் பாகுபடுத்தி, அருஞ்சொற் குறிப்பு, மேற்கோள் ஆகியவற்றுடன் 1905ஆம் ஆண்டில் வெளியிட்டனர். சேலம் மாவட்டம் இராசீபுரம் கழக உயர்நிலப்ை பள்ளித் தமிழாசிரியர் ஆ. பொன்னுசாமி பிள்ளை அவர்களைக் கொண்டு பதவுரை, குறிப்புரை, அருஞ்சொற்பொருள் ஆகியவற்றை எழுதச்செய்து 1936ஆம் ஆண்டு திருத்தப் பதிப்பாகக் கழகம் வெளியிட்டது. இதுகாறும் பதினொரு பதிப்புக்கள் கழக வழி வெளிவந்துள்ளமை இந்நூற் சிறப்பைப் புலப்படுத்தவல்லதாம்.