உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/468

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புரை

‘புறத்திரட்டு' என்னும் இனிய இத் தொகை நூல் அறத்துப் பால், பொருட்பால் என்னும் இரண்டு பால் களுடன் நிறைவு பெற்றுள்ளது. இதன்கண் காமத்துப்பால் என்னும் பகுதி இடம் பெறவில்லை. பொருட்பால், ‘வாழ்த்து' என்னும் பகுதியுடன் முற்றுப் பெற்றிருப்பதே இதற்குச் சான்றாம்.

ஆனால், ‘புறத்திரட்டுச் சுருக்கம்' என்னும் நூற்கண் கைக்கிளைப் பொருள் ஒன்றுமே அமைந்த முத்தொள்ளாயிர வெண்பாக்கள் அறுபத்து ஐந்தும், தகையணங்குறுத்தல் முதல் ஊடலுவகை ஈறாக உள்ள அதிகாரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குறளாகத் தேர்ந்தமைத்த திருக்குறட்பாக்கள் இருபத்தைந்தும் காமத்துப்பால் என்னும் தலைப்பின்கீழ் இடம் பெற்றுள. இக் காமத்துப் பாற் பகுதி ‘புறத்திரட்டு' என்னும் பொருளுடன் பொருந்துவதில்லை ஆகலின் அப் பகுதியை விடுத்துத் தொல்காப்பியம் முதலாய தொன்னூல் உரைகளில் காணக் கிடக்கும் புறப்பொருட் பாடல்களைத் தேர்ந்து திரட்டிப் பின்னிணைப்பாகச் சேர்த்துக் குறிப்புரையும் எழுதப் பெற்றுள்ளது. இங்கு விலக்கப்பெற்ற முத்தொள்ளாயிரப் பாடல்கள் அடுத்து வெளிவர இருக்கும் ‘அகத்திரட்’டில் இடம்பெறும்.