உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ் வளம் 17

“கலியால் விளைந்த கதை”-(11) யாம் நளவெண்பா சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என்னும் முப்பெரும் பிரிவுகளைத் தன்னகத்துக் கொண்டது. அதன் காண்டப் பெயர்களே உள்ளுறையைத் தெள்ளிதில் விளக்கவல்லன வாய் உள்ளமை அறிக.

நளவெண்பாவின் ஆசிரியர் இயற்பெயர் தெரிந்திலது. அவர் புகழ்ப்பெயரே நிலவுவதாயிற்று. 'புகழேந்தி' என்பதே அப்பெயர். அவர் புகழ்க்கு வேறுஞ் சான்று வேண்டுமோ?

புகழேந்தியார் தொண்டை நாட்டில் பொன்விளைந்த களத்தூரிற் பிறந்தார். மள்ளுவ நாட்டு முரணைநகர் வேந்தன் சந்திரன் சுவர்க்கி என்பவனால் ஆதரிக்கப்பெற்றார் என்பது, தக்க இடங்களில் அவர் அவனைப் பாராட்டிப் பாடியுள்ள பாடல்களால் புலனாகின்றது. முரணை நகர், உறையூர்க்கு அணித்தாயுள்ளதாம். புகழேந்தியார் செஞ்சியர் வேந்தன் கொற்றந்தைமீது ஒரு கலம்பகம் இயற்றியுள்ளார். அன்றியும் அல்லி அரசாணிமாலை, பவழக்கொடி மாலை, புலந்திரன் களவுமாலை முதலாக 15க்கு மேற்பட்டநூல்கள் புகழேந்தியார் பெயரால் வழங்கி வருகின்றன.

புகழேந்தியார், ஒட்டக் கூத்தர், ஒளவையார் ஆகியோர் ஒருகாலத்தே இருந்தவர் என்னும் கதைகள் உண்டு. புகழேந்திப் புலவர் முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்கால மாகிய கி.பி. 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என்பர்.

இலங்கைவேந்தன் ஆரியசேகரனைப் புகழேந்தியார் பாடிய தாகப் பாடலொன்று இருத்தலால் அவனது காலமாகிய பதின் மூன்றாம் நூற்றாண்டே புழேந்தியார் காலமாதல் வேண்டும் என்று தமிழ்ப்புலவர் அகராதி கூறுவதும் இவண் நோக்கத்தகும்.

புகழேந்தியார் பாடியுள்ள கடவுள் வாழ்த்துப் பாக்களால் வைணவர் என்பது விளங்கக்கிடப்பினும், மூத்தபிள்ளையார் சிவபெருமான் வாழ்த்துக்களால் அவர்தம் சமயப்பொறை தெளிவாம்.

புறத்திரட்டில் இடம்பெற்றுள்ள நளவெண்பாய் பாடல் ஒன்றே (550). அப்பாடற் குறிப்பு அது 'நளன் கதை' என்று கூறுகிறது. 1. பிற்காலச் சோழர் சரித்திரம், ii. பக். 101.