உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

இளங்குமரனார் தமிழ் வளம் 17

குறள் வெண்பாவால் அமைந்த நூல் குறள் ஆயினாற்போல, நாலடி வெண்பாவால் அமைந்த நானூறு பாக்களையுடைய நூல் நாலடி நானூறு ஆயிற்றாம்.

உலகப் பொது நூலாம் திருக்குறளை அடுத்து எண்ணத்தக்க அருமையமைந்த நூல் நாலடி. இஃதொரு தொகை நூல் என்பதும், இதனைப் பாடினோர் சமண் சான்றோர் என்பதும் இந்நூலை நோக்குவார்க்கு எளிதில் புலப்படும் செய்திகளாம்.

நாலடியார் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்னும் மூன்று பால்களையும், 40 அதிகாரங்களையும் தன்னகத்துக் கொண்டது. பாலும், இயலும், அதிகார அடைவும் செய்தவர் பதுமனார் என்பது ‘வளங்கெழு' என்னும் பாயிரத்தாற் புலப்படும். அவரே ஓர் உரையும் கண்டார். அதன் பின்னர்த் தருமர் என்பாரும், பெயரறியப் பெறாத பிறிதொரு வரும் உரை கண்டனர். பின்னை உரை ‘விளக்கவுரை' எனக் குறிக்கப் பெறுகிறது.

நாலடி திருக்குறளோடு வைத்து எண்ணப்படும் சீர்மை, “நாலடி வள்ளுவராமே”

என்னும் அரங்கக் கோவையாலும்,

66

“பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்”

66

66

பாலு நெய்யும் உடலுக் குறுதி

வேலு வாளும் அடலுக் குறுதி

ஆலும் வேலும் பல்லுக் குறுதி

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

நாலடி இரண்டடி கற்றவனிடத்தே வாயடி கையடி அடிக்காதே”

என்னும் பழமொழிகளாலும் நன்குணரலாம்.

பதினெண் கீழ்க்கணக்கில் முற்கண் கூறப்பெறும் இந்நூற்கண் ‘முத்தரையர்’ என்பாரின் கொடைச் சிறப்பு இரண்டு பாடல்களில் (200, 296) கூறப் பெற்றுள்ளது. இம் முத்தரையரைப் பற்றிச் செந்தலைக் கல்வெட்டுக் குறிக்கும் செய்திகொண்டு நாலடியாரின் காலம் கி.பி. 8ஆம் நூற்றாண்டாகலாம் என்பர்.