உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

இளங்குமரனார் தமிழ் வளம் 17

23. பழமொழி

=

பழைமை + மொழி பழமொழி. ஒவ்வொரு பாடல் இறுதிக் கண்ணும் பழமொழி அமைக்கப்பெற்றுள்ளமையால் இந்நூல் பழமொழி எனப் பெயர்பெற்றது. நானூறு வெண் பாக்களைக் கொண்டது இந்நூல்.

தொல் பழைமை வாய்ந்தது தமிழகம். அதன் பழைமைக் கேற்ப வாழையடி வாழையென வழங்கிவரும் பழமொழிகள் எண்ணற்றவை. அவற்றுள் ஆராய்ந்தெடுத்த மணிகளைப் பதித்து அறநெறி புகட்டிய அருமைப் பாடுடையது பழமொழி நானூறு.

திருக்குறள் நாலடி என்னும் அறநூல்களை அடுத்து வைத்துப் பாராட்டும் சிறப்புடையது இப்பழமொழி. அவற்றில் கூறப்படாத சில அரிய கருத்துக்களும் இந்நூற்கண் உளவென்பது ஆராய் வார்க்குப் புலனாதல் ஒருதலை. அன்றியும் வரலாற்றுத் துறைக்கு இந்நூல் அருந்துணை செய்வதும் கண்கூடு.

இந்நூலாசிரியர் முன்றுறையரையனார் என்பதும், அவர் பண்டைப் பழமொழிகளை ஆராய்ந்து நாலடி வெண்பாப் பாடல் நானூறு செய்தார் என்பதும், அவர் சமண் சமயஞ் சார்ந்தவர் என்பதும்,

“பிண்டியின் நீழல் பெருமான் அடிவணங்கிப்

பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா

முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான் இன்றுறை வெண்பா இவை

99

என்னும் தற்சிறப்புப் பாயிரப் பாடலால் புலப்படும். இவர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டென்பர்.

கொற்கை முன்றுறை, காவிரி முன்றுறை, திருமருது முன்றுறை எனப் பல முன்றுறைகள் தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. எனினும் தமிழ்ப் பேராசிரியர் செல்வக் கேசவராய முதலியார் இம் முன்றுறையைப் பாண்டி நாட்டில் உள்ளதோர் ஊராகக் கூறுவர். கொற்கை முன்றுறையாக இருக்கக்கூடும் என்பதற்கு நூற்கண் வழங்கும் பழமொழிகளும்; சொற்களும் சான்றாக உள்ளன.