உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. துன்பத்தை வெல்லும் துணிவு

இடுக்கண் என்பது துன்பம்; துன்பம் என ஒன்று வந்தால் அது எவ்வளவு சிறிதாக இருந்தால் கூட அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் துவள்பவர்களைப் பார்க்கிறோம்; துடிப்பவர் களைப் பார்க்கிறோம்; வாராதவை எல்லாம் வந்து விட்டனவாக எண்ணித் தங்களைத் தாங்களே வாட்டிக் கொள்பவர்களைப் பார்க்கிறோம். இத்தகையவர்களைப் பார்த்துத் திருவள்ளுவர் இரக்கப்படுகிறார். ஆறுதலும் தேறுதலும் சொல்கிறார். அரவணைத்துக் கொண்டு அறிவுறுத்துகிறார்.

'துன்பம் வருகிறதா? வரட்டும்; துணிந்து நில்லுங்கள் துன்பத்தைத் துச்சமாகப் பாருங்கள்; ‘துன்பமே நீ என்னை என்ன செய்துவிட முடியும்’ என்னும் உறுதியுடன் துன்பத்தைக் கண்டு சிரியுங்கள்' என்கிறார் திருவள்ளுவர். ‘இடுக்கண் வருங்கால் நகுக' என்பது அவர் வாக்கு.

6

திருநாவுக்கரசருக்குத் தொல்லைக்கு மேல் தொல்லை வந்தது. தொல்லையைத் தொல்லையாக அவர் கருதவில்லை. பிறகு என்ன செய்தார்? விலா எலும்பு விம்மி மொடுமொடுக்கத் துன்பத்தைக் கண்டு சிரித்தாராம்! “விலா இறச் சிரித்திட்டேனே” என்கிறார் அவர். துன்பம் திருநாவுக்கரசரிடம் தோல்வி காணாமல் என்ன செய்யும்?

துன்பம் வரும் போது சிரிக்க முடியுமா? துணிவு இருந்தால் சிரிக்க முடியும். வலிமை வாய்ந்த ஒருவன் மற்போர்க் களத்தில் மார்தட்டிக் கொண்டு நிற்கிறான். அவன் முன்னே மெலிந்த ஒருவன் கச்சை கட்டிக் கொண்டு கை கலக்க வந்தால், “நீயா என்னொடு போர் புரிய வருகிறாய்” என்று நகைப்பானா மாட்டானா? போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடுபவனைக் கண்டு வெற்றி கொண்ட வீரன் நகைப்பானா மாட்டானா? இத்தகைய வெற்றிச் சிரிப்பு, துன்பத்தை அலறியோடச் செய்பவர் களுக்கும் உரிமையானதுதானே.