உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ்வளம்

18

மிக்கவர்களோ எத்தகைய தடை ஏற்பட்டாலும் சரி, ஏறு போல நிமிர்ந்து நின்று கடனாற்றி வெற்றி கண்டு விடுகின்றனர்.

“ஏறுபோல் பீடு நடை” என்பர் “ஏறுபோல் நடையினாய் வாவாவா? என்றார். பாரதியார் நடைக்கும் வினையாற்றும் திறமைக்கும் ஏறு சிறந்த எடுத்துக் காட்டாகும்.

ஏறு என்பது காளையைக் குறிக்கும். காளையிலும் சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட வீறு அமைந்ததே ஏறு என்னும் பெருமைக்குரியதாம். முற்காலத்து வேந்தர் அரண்மனைகளில் மும் முரசுகள் முழங்கின. அவை கொடை முரசு, வெற்றி முரசு, மங்கல முரசு என்பன. வெற்றி முரசுக்குத் தனியொரு சிறப்புண்டு புலியொடு போரிட்டு வெற்றி கண்ட காளையின் தோலே வீர முரசுக்கு உரியதாகக் கொண்டனர். புலி எத்தகைய வலியது! யானையையும் வெல்லும் வலியது ஆயிற்றே. அத்தகைய புலியையும் வெற்றி கொள்ள வல்லது காளை என்றால் அதன் வீரச் சிறப்பைக் கூறமுடியுமோ?

காளையின் வீரத்திறம் இருக்கட்டும். அதன் முயற்சித் திறம் தான் எத்தகையது? வண்டியில் சுமக்க மாட்டாப் பெரும் பாரம் ஏற்றப்பட்டிருக்கிறது. அவ்வண்டியோ அளறும் சேறும் மண்டிய வழியில் செல்கிறது. வண்டியின் அச்சும் பாரும் நிலத்தைத் தொடும் அளவுக்கு ஆழ்ந்து விடுகின்றன. அந்நிலையிலும் நுகக்கோல் ஒடிந்தாலும் கயிறு அவிழ்ந்தாலும் விடாமல், தலையைச் சாய்த்துக் கொம்பை உயர்த்தி மூக்கை ஊன்றி மண்டியிட்டு வண்டியை இழுத்துச்செல்கிறது காளை. துணிவை நோக்கும்போதுதான் இறைவன் ஊர்தியாகக் காளையை வைத்த திறமும், இறைவனைக் காளையர் என்றும், காளையப்பர் என்றும் விடையேறி என்றும் கூறும் அருமையும் புலப்படும்.

திருவள்ளுவர் இடுக்கண் அழியாமையைப் பற்றிக் கூற வரும்போது அவர் எண்ணத்தில் காளை முற்பட்டு நிற்கின்றது. “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்றும் “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்” என்றும் உழவினைப் போற்றிய திருவள்ளுவர், காளையைக் கொண்டே, இடுக்கண் அழியாமையை வலியுறுத்தியது எதிர்பார்க்கக் கூடியதேயாம்.

66

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப் பாடுடைத்து