உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

11

என்பது குறள், தடை ஏற்பட்ட இடத்தெல்லாம் பாரம் ஏற்றிய வண்டி அழுந்தி விடாமல் இழுத்துச் செல்லும் காளைபோல், எடுத்துக் கொண்ட செயலை விடா முயற்சியுடன் முடிக்க வல்லவனை அடைந்த துன்பம், தானே துன்பப்படும் என்பது இதன் பொருள்.

66

‘அதியமானை நோக்கி ஔவையார் ஒருமுறை கூறினார்: “மறப்புலி எழுந்தால் அதனை எதிர்க்கும் மான் கூட்டமும் உண்டோ? கதிரோன் கடுகி எழுந்தால் அதனைத் தடுக்கும் இருளும் உண்டோ? மணல் பரக்கவும் கல் பிளக்கவும் நடக்க வல்ல மனச் செருக்குடைய காளை போதற்கு அரிய வழியும் உண்டோ? இல்லையன்றோ இவைபோல நீ போரில் புகுந்தால் நின்னை எதிர்த்து நிற்பவர் எவர்? என்றார். ஐயூர் முடவனார் என்னும் புலவர் மாறன் வழுதி என்னும் பாண்டியனை நோக்கி ஒரு முறை கூறினார்; நீர் மிகுந்தால்அதனைத் தாங்கும் அணை இல்லை; நெருப்பு மிகுந்தால் உயிர்களுக்கு உதவும் நிழல் இல்லை; காற்று மிகுந்தால் அதனைத் தாங்கும் வலிமையொன்றில்லை. நீ ஊக்கத்தொடு கிளர்ந்தால் உன்னைத் தடுக்கவல்லார் உளரோ?” என்றார்.

எட்மண்ட்பர்க் என்பார் சொன்னார்; “எவன் நம்மோடு போராடுகிறானோ அவன் நம் நரம்புகளை முறுக்கேற்றி விடுகின்றான். நம்முடைய திறங்களையெல்லாம் கூர்மைப் படுத்தி விடுகின்றான். ஆகலின் நம் பகைவன் எவனோ அவனே நமக்கு நலம் பல செய்கிறான்” என்றார்.

இவர்களெல்லாம் வள்ளுவர் கூறியவாறு, துன்பத்துக்குத் துன்பம் ஆக்கியவர்களாவர்.

வெள்ளம் போலப் பெருகி வரும் துன்பமும் அறிவுடையவன் உள்ளத்தில் நினைத்த அளவானே ஒழிந்து விடும் என்று கூறிய திருவள்ளுவர், அத்துன்பம் அடுக்கடுக்காக வந்தாலும் தளராத உறுதி படைத்தவனிடத்து என்ன செய்துவிட முடியும்? அந்த இடுக்கண் இடுக்கட் பட்டே செல்லும் என்கிறார்.

இரும்பைக் கடித்துத் தின்று இஞ்சிச் சாறு குடிக்க வல்லவனுக்கு, இலைக் கறிதானா செரிக்காமல் போய் விடும்? என்பது பழமொழி.