உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

இளங்குமரனார் தமிழ்வளம்

18

முத்தும் வைரமும் தேடித் தேடி வாங்குவார் உளர். 'கலைப் பொருள்களுக்கும், காட்சிப் பொருள்களுக்கும் கணக்கின்றிச் சலவிட முந்தும் உலகம் நல்லவர் நட்பைக் கொடுத்துக் கொள்வதற்கு விரும்பி முன் வருமா? வருமானால் உயிரின்ப அன்பு வாணிகம் அஃதாக அமையும் என்பது வள்ளுவம் முழக்கும் முழக்கமாம்.

66

குடிப்பிறந்து தன்கண் பழிநாணுவானைக் கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு”

என்பது குறள்

நட்பு உயிர்த் தொடர்புடையது. தம் நண்பர் அடையும் இன்பத்தைத் தம் இன்பமாகவும், அவர் அடையும் துன்பத்தைத் தம் துன்பமாகவும் அவர் அடையும் புகழைத் தம் புகழாகவும், அவர் அடையும் பழியைத் தம் பழியாகவும் கொள்ளக் கூடியது நட்பேயாம். ஆதலால் நட்பு உயிர்த் தொடர்பினது என்பது தகும்.

நட்புகள் எல்லாமும் உண்மை நட்புகளோ? உயிர் நட்புகளோ? இல்லை போலியான நட்புகளும் உண்டு நல்ல துளசி போலவே நாய்த் துளசி உண்டே! நல்ல சுரைக்காய் போலவே பேய்ச் சுரைக்காய் உண்டே! இவை போல நட்பிலே அமைந்த போலி அதுவாம். அப்போலி நட்பு எப்படிஇருக்கிறது?

ஆடல் பாடல்களுக்கும், கேலி கிண்டல்களுக்கும் உரியது நட்பு எனக் கொள்கிறது; களிப்புக்கும் மகிழ்வுக்கும் துணை என்று மதிக்கிறது; பொழுது போக்குக்கு உரியது என்று நினைக்கிறது. அன்றியும் எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும் மறுக்காமல் அவற்றை எல்லாம் ஒப்புக் கொண்டு‘ஆமாம்' என்பதே நட்பு என்றும் கொண்டுள்ளது. தாம் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே ‘நட்பு' என்பதை முதலீடாகப் போட்டு நடிக்கும் அவர்களிடம் உண்மை நட்பை எப்படி எதிர்பார்க்க முடியும்?

பிறவிகளில் எல்லாம் சிறந்த பிறவி மனிதப்பிறவி. அப்பிறவியோ தன் இயலாலும் செயலாலும் தெய்வ நிலை அடைதற்குரியது. அதற்கு உரிமைத் துணையாக அமைந்தது நட்பு என்றால் அந் நட்புக்கு எத்தகைய பெருமை உண்டு? இப்பெருமைக்குரிய நட்பினைச் சிறுமைக்கு இடமாக்கி விட அறிவுடையவர் நினைவரோ?