உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

29

அறிவின் உயர்வும் தொண்டின் உறைப்பும் ஒருங்கே கொண்ட, வீறுசால் விவேகானந்தரின் முழுமதி முகம் முள்ளில்லா ரோசா இல்லையா?

தொண்டிலே பழுத்த தோன்றல் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் முகம் முள்ளில்லாத ரோசா இல்லையா?

கோடி கோடிப் பேர் உள்ளங்களை யெல்லாம் கொள்ளை காண்ட அந்தப் பொக்கைவாய்ப் புன்முறுவல் காந்தியார் தொண்டுமுகம், முள்ளில்லாத ரோசா இல்லையா?

-

எங்கே புயல், அங்கே அவர்! எங்கே நிலநடுக்கம், அங்கே அவர்! எங்கே நோய், அங்கே அவர்! எங்கேபகை, அங்கே அவர் - என ஐந்நூறு கோடி உலக மக்கட்கெல்லாம் ஓருயிராய் - ஒரு தாயாய்த் திகழ்ந்தாரே! திரேசா அன்னையார்! அவர் திருமுகம் முள்ளில்லாத ரோசா இல்லையா? இத்தனை முள்ளில்லாத ரோசாக்களும் நமக்கு என்ன சொல்கின்றன? நீங்களும் முள்ளில்லாத ரோசாவாக விளங்க முடியும் என்பதை யன்றோ!

கரும்பு, இனிப்பு; வேம்பு, கசப்பு! பார்வையில் முரணாகத் தோன்றுகின்றன! சுவையிலும் முரண்பட்ட வையா? பார்வையாளிக்கு இருக்கும் முரண், படைப்பாளிக்கு இருப்பதில்லை. இருப்பின் படைக்கப்பட்டிரா!

கரும்பும் வேண்டும் உலகுக்கு! வேம்பும் வேண்டும் உலகுக்கு! இரண்டும் இணைதலும் வேண்டும் உலகுக்கு! வேண்டும் காலத்து, வேண்டுபவர்க்கு வேண்டும் பொருள்களில் முரண் என்ன முரண்?

சுவைகளை எண்ணி, 'ஆறு' என்றனர். ஆறு சுவைகளின் கலப்புச் சுவைகளோ, ஆயிரம் ஆயிரம்! ஆறு சுவைகளும் இனிப்பு,புளிப்பு, உறைப்பு, உப்பு, துவர்ப்பு, கசப்பு என்பன.ஆறும் சுவைகள் என்று முடிவு செய்யப்பட்டபின் எதிரிடைப் பேச்சுக்கு டமேது?

உலகம் கரும்பையும் வேம்பையும் ஒப்பப் பார்க்கிறதா? பார்க்கத்தான் முடிகிறதா? “உம்சொல் கரும்புபோல் இன்சொல்" என்று பாராட்டட்டும்! உளறிக் குழறுபவருக்கும் உவகை பிறந்து விடுமே! நன் மொழி தேர்ந்து நயமாக உரைப்பவரையும் “உம் சொல் வேப்பங்காயாக இருக்கிறது” என்று சொல்லட்டும் வேப்பெண்ணெய் குடித்தது போல் முகஞ் சுழிக்க மாட்டாரா?