உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

இளங்குமரனார் தமிழ்வளம்

18

செயலைச் செய்வது வேரேயாம்! முதல் வேரில் இருந்து தோன்றாமல் தண்டு முதலிய உறுப்புகளினின்று உண்ட ாகின்ற வேர் ஒட்டுவேர்! ஆலம் விழுது, தாழை வேர், வெற்றிலைத் தண்டில் இருந்து எழும்பும் வேர் ஆகியவை நிலத்திற்கு மேலே காற்றிலே வளர்கின்றன! சிலவகைக் கள்ளி இலைகளின் விளிம்பிலும் வேர்கள் உண்டு!

வேரி என்பதற்குப் பொருள் மணம். வேர்க்கு மணம் இருப்பதால் வந்த பொருள் இது, வெட்டி வேர், நன்னாரி வேர் முதலியன நறுமணமுடையவை மட்டும் தாமா? மருத்துவத்தின் பயன்கள் தாம் எவ்வளவு மிகுதி! வேர்க் கடலை தருவது ஏது? வேர்க்கிழங்கு முதலாக எத்தனை கிழங்குகள்! வேர்ப்பலாவைச்

சொல்லாமல் விடலாமா?

பயிர்களின் தாய் வேர் எனலாம்! தந்தையும் அதுவே எனலாம்! ஏன் காவலனும் அதுவே எனலாம்! உரமும் நீரும் பயிர்க்கு நிலத்தில் இருந்து. அது தானே எடுத்துத் தருகிறது; காற்று மோதுதலில் இருந்து, அது தானே நிலை நிறுத்திக் காக்கிறது! அகல் மரமாம் ஆலமரம் அகல அகல அதன் வீழ்துகளாம் வேர்க்கால்கள் தாமே, இயற்கையின் ஆயிரக்கால் மண்டபமாக நிலைநிறுத்தி வைக்கின்றன. வேரும் வீழ்தும், தோன்றும் இடங்களால் வேறு பட்டால் கூட, செயலில் வேறுபடாச் செம்மையுடையவை!

கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி என்பவற்றின் வேர்கள் மருத்துவர்களால் பஞ்சமூலம் எனப்படும். இப்ஞ்சமூலங்களும் மாந்தர் உடல் நோய்க்கு மருந்தாவன. இவ்வாறே மாந்தர் உயிர் நோய்க்கு மருந்தாகும் ஐந்து ஐந்து கருத்துகளைக் கொண்டதொரு நீதிநூல் உண்டு! அதற்குச் சிறு பஞ்சமூலம் என்பது பெயர், அதிலே வரும் ஒரு பாடற் கருத்து; “பிறர் செய்த பிழையைப் பொறுத்தல் பெருமை; அதனையே எண்ணிக் கொண்டிருத்தல் சிறுமை; பகையை மறந்து வாழ்தலும், ஆன்றோரும் சான்றோரும் இகழாதிருக்க வாழ்தலும் நன்மை” என்பது.

“ஆயிரம் வேரைக் கண்டவர் அரை வைத்தியர்" என்பது பழமொழி! வேரறிந்த மருத்துவரே, பேரமைந்த மருத்துவர் அல்லரோ!