உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

63

என்றார் திருவள்ளுவர். “உழைத்தால் உயர்வு" என்பது என்றும் அழியா உறுதிச் சொல்லாகும்!

எவரொருவர்க்கும் கட்டயமாகத் துணை வேண்டும் துணையோடு வாழ்வதே மனித இயற்கையும் முறைமையும் தேவையும் ஆம்.

துணைகள் பலப்பல. அவை வழித்துணை, பேச்சுத் துணை, விளையாட்டுத் துணை, கல்வித் துணை, தொழில் துணை, நட்புத் துணை, வாழ்க்கைத் துணை இன்னவாறானவை. இவ்வெல்லாவாற்றிலும் மேலானது பெரியவர் துணை.

நாம் அடைய வேண்டும் நலங்களுக்கெல்லாம் வழி காட்டியாக மட்டும் இல்லாமல் வழி கூட்டியாகவும் இருப்பவர் பெரியர், பெற்றோரினும் பெருந்தகையராய், ஆசிரியரினும் ஆசிரியராய் கனியினும் கனிவினராய் கண்டிப்பில் காவலராய் இருப்பவர் பெரியர். அவர் உள்ளம், உரை, செயல், மூன்றும் ஒத்து நடையிடும் ஒப்புரவாளர்; செயற்கரிய செய்யும் செம்மல்; அவர் துணை, தெய்வத் துணை!

வழுக்கல் நிலத்திலே நடப்பவர்க்கு ஊன்றுகோல் எப்படி உதவியாக இருக்குமோ அப்படி உதவியாக இருப்பது பெரியவர் துணையாகும். அத் துணை, தணிந்த நடையைத் துணிந்த நடையாக்கும்; வளைந்த முதுகை நிமித்தி நேராக்கி நடக்க வைக்கும்; ஆகாத கல்லும் அறிவறிந்த சிற்பியின் கைப்பட்ட அளவில் கையெடுத்து வணங்கும் தெய்வவுருவாக மாறுவது போல் எளியவரையும் அரியவர் ஆக்கிவிடும்

மனத்திற்குஒர் இயல்பு உண்டு. அது சமயக்கொள்கையாகவும் சொல்லப்படுவதாயிற்று. அது "சார்ந்ததன் வண்ணமாதல்" என்பது.

நாம் எந்தச் சூழலில் வாழ்கிறோமோ அந்தச் சூழலுக்குத் தக்கவாறு நம் மனம் பழகிப் போய்விடும். நாம் எத்தகையவர் களோடு பழகி விடுகிறோமோ அவர்களுக்குத் தக்கவாறு நம் மனமும் பழகிப் போய்விடும். பழகி விட்டால் அப் பழக்கம் வழக்கமாகும். வழக்கம் ஒழுக்கமும் ஆகிப் போகும். ஆதலால் துணையைக் கொள்வதில் மிகமிக விழிப்பு வேண்டும். நல்ல துணைக்கும் மாறாக அல்ல துணை வாய்த்து விடக் கூடாதே என அறவோர்கள் நெஞ்சம் துடிக்கும்; வருந்தும்; அதனால் பெரியவரைத் துணைக்கொள்க என்று சொல்லிய அளவில் நில்லாமல் சிற்றினம் சேராதே என்றும் வலியுறுத்தினர்.