உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

இதில் கூறப்படும் இன்னொருதுறை,

"கட்டமை ஒழுக்கத்துக் கண்ணுமை

என்பது. கட்டாவது உறுதிப்பாடு. உரன் என்பதும் அது. “உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்" "பொறிவாயில் ஐந்தவித்தான்” என்னும் வள்ளுவங்கள் கட்டமை ஒழுக்கம் பற்றியவை. கண்ணுமை = பாருந்தி நிற்கும் தன்மை.

இதற்கு அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, நடுவுநிலைமை, வெஃகாமை, புறங்கூறாமை, தீவினையச்சம், அழுக்காறாமை, பொறை யுடைமை என்பவற்றை எடுத்துக் கூறுவார் இளம்பூரணர்.

வாகைத் திணையின் நிறைவுத் துறைகளாக வருவன, அருளொடு புணர்ந்த அகற்சி என்பதும் காமம் நீத்த பால் என்பதுமாம்.

வாகையாவது வெற்றி: வாழ்வின் வெற்றியாவது அருள்கலந்த துறவும் (அருட்பணி புரிவதற்காகவே கொள்ளும் பற்றறுதலும்) காமம் நீங்கிய தூய்மையும் ஆகும் என்கிறார்.

இவ்விடத்தே, நாம் முன்னர்க் கண்ட,

“காமம் சான்ற கடைக்கோட் காலை ஏமம் சான்ற மக்களொடு துவன்றி

அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்

சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே'

என்னும் கற்பியல் நிறைவு விளக்கத்தை எண்ணல் வேண்டும்.

"ஒன்றே வேறே என்றிரு பால்வயின்

ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்

ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப"

என்னும் களவியல் தொடக்கமும் நோக்குதல் வேண்டும். மேலும், ஆரா இயற்கை அவா நீத்துப் பேரா இயற்கைப் பெற்றியுறுதல் கூறும் வள்ளுவ மும் எண்ணல் வேண்டும்.

காஞ்சி

காஞ்சி என்னும் புறத்திணை, பெருந்திணை என்னும் அகத் திணைக்குப் புறனாகும்.

பலவகைச் சிறப்புகளும் உடையதுதான் உலகம்; எனினும் அது நிலை பெறாத் தன்மையும் பொருந்தியதாகும் என்பது காஞ்சித் திணையின் பொருள்.

“பாங்கருஞ் சிறப்பின் பல்லாற் றானும்

நில்லா உலகம் புல்லிய நெறித்தே

என்பது நூற்பா (1024). புல்லுதல் பொருந்துதல்.