உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

நில்லா உலகம் என்றது, அழுது அரற்றுதற்குக் கூறியதா?

147

உலகியல் உண்மை புரிந்து, உரமாகக் கடனாற்றுதற்கும், நில்லா உலகில் நிலைபெற வாழமுடியும் என்பதைப் புகழால் நிலை நாட்டுதற் குமேயாம். “மன்னா (நிலையா) உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் நிறீஇத் தாம் மாய்ந் தனரே” என்னும் புறமும், “ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பது ஒன்று இல்" என்னும் அறமும் தெளிவிக்கும்.

காஞ்சி, உலகியல் அறிவு முதிர்நிலை என்பதும், பெருந்திணை காமமுதிர்நிலை என்பதும் எண்ணின் புறனாதல் புலப்படும்.

மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை என்பது முதலாகக் காடு வாழ்த்து ஈறாகக் காஞ்சித்திணை இருபது துறைகளையுடையது. முன்னவை பத்தும் ஒப்பிலாச் சிறப்பும், பின்னவை பத்தும் நிலையாமைக் குறிப்பும் கூறுவன.

மாற்றுதற்கு அரியது இறப்பு. அதனைச் சிறப்பு ஆக்குதற்குக் கூடும். அதனாலேயே இறப்பு என்பதற்குச் 'சிறப்பு' என்னும் பொருளும் நம் முந்தையர் கண்டனர்.மாண்டார் என்பதும் அப் பொருளதே. சிறப்புடன் இறக்கும் இறப்பே இறப்பு (மற்றவை சாவு) என்றனர். இதனை,

"மாற்றரும் கூற்றம் சாற்றிய பெருமை

என்றார் ஆசிரியர்.

அமர்க்களம் சென்றான் ஒருவன், அருங்கடனாற்றி அமர்க்களத்தே அமரன் ஆகின்றான். குடிமையராலும் நாட்டவராலும் தெய்வமாகக் கல்நட்டு, பீடும் பெயரும் எழுதப்பட்டு, வழிபாடு செய்யப்படுகின்றான். வானுறையும் தெய்வ நிலையை வையகத்தே பெற்றுவிடுகிறான். இது பெருமை; பிறர் பெறாப் பெருமை; கூற்றுக்கும் அஞ்சாத பெருமை என்பதன் வழி மொழிதலாக,

"நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு

எனவரும் குறளை எண்ணினால் ‘பெருமை' ஆளப்பட்ட வகை தெரிந்து பொருள் புலப்பாடும் ஆகும்.

நிலையாமை போலிமையாகத் திணிக்கப் படாமல், அவரவரே அறிவு முதிர்வு, அகவை முதிர்வு.பட்டறிவு என்பவற்றால் தாமே உணர்ந்து போற்றும் வகையில் அமைந்தமை, தமிழியல் நெறியாம். அதனாலேயே போர்க்களம், இறப்பு, அழிவு, வெற்றி என்பவை யமைந்த புறத்திணையின் முடிநிலையாகிய காஞ்சித் திணையின் திரட்டு என நிலையான மை வைக்கப் பட்டதாம்.