உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

இளங்குமரனார் தமிழ்வளம் – 19

கொடி என்பது வளைவுப் பொருளது. ஆதலால், படர்கொடி, ஆடு கொடி,பாம்பு, மின்னல் முதலிய பொருள்களைத் தரும்.

கந்தழி என்பது கந்து அழி என்னும் இருசொல் இணைவு.கந்தாவது கட்டுத்தறி. கட்டுத் தறி, நெய்வார் கருவிக்கு அமைந்த நிலைத் தூண்; மாடு கட்டுதற்கு அன்றி யானை கட்டுதற்கும் தறியுண்டு; கட்டிவைக்கும் இடம் ம் கட்டுத் துறை; கட்டிவைக்கப் பயன்படும் தூண் கட்டுத்தறி. அழி என்பது அழிப்பது. கட்டினை அழிப்பது (அ) கட்டற்றது கந்தழி.

வள்ளி என்பது வளம், வளமை. கொடி ஒன்று வள்ளி; கொடை யாளர் வள்ளியோர்; வள்ளி, வளத்தக்காள் ஆகிய இல்லாள்.

கடவுள் வாழ்த்து என நூலொடு பாடப்பட்டுக் கிளர்ந்த நூல் நாமறி அளவில் முற்படக் கிடைத்தது திருக்குறளே. அதில் கடவுள் என்னும் சொல் ஆளப்பட வில்லை எனினும், கடவுள் வாழ்த்தென அதிகாரப் பெயர் உண்டு. அதிகாரப் பெயர் தவறாமல் மூலப்படி, உரைப்படி எல்லாவற்றிலும் இருந்துள்ளமை அறிதலால் நூலொடு கூடியமைந்ததேயாம்.

தொகைநூல் கடவுள் வாழ்த்தோ பாட்டின் கடவுள் வாழ்த்தாகிய திருமுருகாற்றுப்படையோ தொகுத்தார் அடைவில் அமைந்தவை.

இவ் வகையால் திருக்குறளை முன்வைத்து, கடவுள்வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத் தல் என்னும் நான்கு அதிகார வரிசையொடு ஒப்பிட்டுக் காணின் பொருந்த லாம் எனத் தக்க தெளிவு உண்டாகின்றது.

கொடி நிலை என்பது மின்னுக் கொடி என்னும் இளங்கோவடிகள் ஆட்சியால் மழையொடு தொடர்புறுதல் அறியலாம். ஆகலின், வான் சிறப்பு

எனலாம்.

கந்தழி என்பது பற்றற்றது என்னும் பொருள் தருதலால் பற்றற்ற நீத்தார் பெருமை அக் கந்தழி ஆகலாம்.

வள்ளி, வளமிக்க தன்மையொடு, உளமிக்க தன்மையும் ஒன்றிய அறன் வலியுறுத்தலாகக் கொள்ளலாம்.

இவ் வகையால் கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்னும் நான்கும் முறையே, தொல்காப்பியர் கூறிய கடவுள் வாழ்த்து, கொடி நிலை, கந்தழி, வள்ளி என்பவற்றை உட்கொண்ட அமைப்பு ஆகலாம் என்பது. இதனை அருமையாக எடுத்துக் காட்டியவர் பேரா. மு. இராகவ ஐயங்கார் (பொருளதிகார ஆராய்ச்சி. பக். 143). இவ்வாறு அமைதி கொள்ளல் தகுமோ எனின், ‘தொல்காப்பியர் வழியில் திருவள்ளுவர்' என்னும் விரி கட்டுரை காணல் தெளிவாம். 'நூல்: திருக்குறளுக்கு உரை திருக்குறளே' என்பது; எம் நூல்.