உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் வாழ்வியல் இலக்கணம்

189

"முற்பருவத்துக் கைத்தும் பிற்பருவத்து உறுதிபயக்கும் வேம்பும் கடுவும் போல வெய்யவாயின சொல்லினைத் தடையின்றிப் பிற்பயக்கு மெனக் கருதிப் பாதுகாத்துக் கிளக்கும் கிளப்பினான் மெய்யாக அறிவுறுத் துவது வாயுறை வாழ்த்து எனப்படும்” என்பது பேராசிரியர் உரை. அவையடக்கியல்

தேர்ச்சியில்லாத சொற்களைச் சொல்லும் வகை தெரியாமல் யான் சொன்னாலும் உங்கள் தேர்ச்சியால் அமைத்துக் கொண்டு அருள்வீராக என அவையோரை வேண்டிக் கொள்ளுதல் அவையடக்கியலாகும்.

அவையை அடக்குதல் தகுமோ எனின், அவைக்குந் தான் அடங்கியமை உரைத்து வேண்டுதலால் அவர்தம் தகவால் அடங்குவர் ஆதலால் அவரை, அடங்குதல் வகையால் அடக்குதல் ஆயிற்று என்க. “என்றும் பணியுமாம் பெருமை” என்பது கூறுவார்க்கும் கூறக் கேட்பார்க் கும் பொதுமையது ஆகலின். ‘அடங்கிப் போதல், அடக்கும் கருவி’ என்பது அரிய வாழ்வியல் வளச் செய்தியாம்.

செவியுறை

செவியை உறுத்தும் வகையில் இடித்துக் கூறி இன்பம் சேர்ப்பது செவியுறை ஆகும். உறுத்தும் உரை உறை ஆயது.

இடிக்கும் துணையாரை இல்லாதவர் வாழ்க்கை கெடுப்பவர் இல்லாமலும் கெடும் என்பது வாய்மொழி யாதலும், “இடிக்கும் கேளிர்" என்பது நட்பியலாதலும் அறிந்து போற்றத் தக்கவை.

"செவியுறை தானே

பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண் அவிதல் கடனெனச் செவியுறுத் தன்றே”

என்பது நூற்பா (1371).

=

பொங்குதல் = செருக்குதல்; புரையோர் = உயர்ந்தோர்; அவிதல் = அடங்கி நடத்தல்.

“எரியாற் சுடப்படினும் உய்வுண்டாம் உய்வில்லை

பெரியார்ப் பிழைத்தொழுகு வார்"

என்பது வள்ளுவம் (896).

புறநிலை வாழ்த்துக் கூறும்போது அவ் வாழ்த்து, கலிப்பாவும் வஞ்சிப்பாவும் கொள்ளாது என்றார் ஆசிரியர். ஏன்?

வாழ்த்து அளவுடையதாக அமைதல் வேண்டும். வரம்பிலா வாழ்த்து இயல்பிலாததாகிவிடும். ஈரடி, மூவடி, நாலடி அளவில் அமையும் வெண்பாவும் அகவலும். ஆனால், கலியும் வஞ்சியும் அவ்வாறு அமையா.