உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நச்சினார்க்கினியர்

தனிப்பெருஞ்சிறப்பு

தமிழெனும் பெருங்கடற் பரப்பில் ஒரு கலஞ்செலுத்தி உலாக் கொண்டு, உயர்மணித் தொகுதிகளையெல்லாம் தொகுத்துப் பின்னவர்க்குக் கருவூலமென வைத்துச் சென்ற உரையாசிரியர் ஒருவர் உண்டென்றால் அவர் நச்சினார்க்கினியரே! அவரை அடுத்து எண்ணத்தக்க ஒருவர் யாப்பருங்கல உரைகாரரே! இன்னொருவர் அடியார்க்குநல்லார். எத்தனை நூல்களுக்கு உரை கண்டுள்ளார் நச்சினார்க்கினியர்! எத்தனை நூல்களை மேற்கோள் காட்டியுளார்! வாழ்நாளை எல்லாம் முற்றாக உரை வரைதற்கெனவே பயன்படுத்திய பெருந்தகை நச்சினார்க்கினியரே.

உரை கண்ட நூல்கள்

விருத்தி

"பாரத்தொல் காப்பியமும் பத்துப்பாட்டுங்கலியும் ஆரக் குறுந்தொகையுள் ஐஞ்ஞான்கும் - சாரத் திருத்தகு மாமுனிசெய் சிந்தா மணியும்

விருத்திநச்சி னார்க்கினிய மே

என்னும் வெண்பாவுரைக்குமாறு தொல்காப்பியம், பத்துப்பாட்டு, கலித்தொகை, சிந்தாமணி ஆகியவற்றுக்கு நச்சினார்க்கினியர் வரைந்த உரை நமக்கு வாய்த்துள்ளது. குறுந்தொகைக்குப் பேராசிரியர் வரைந்த உரை அகப்படாமை போலவே நச்சினார்க்கினியர் வரைந்த 20 பாடல்களின் உரையும் அகப்பட்டிலது.தொல்காப்பியம் முழுவதற்கும் உரைகண்டிருப்பி னும் பொருளதிகாரத்திலுள்ள மெய்ப்பாட்டியல், உவமையியல், மரபியல் ஆகிய மூன்றியல்களுக்கும் உரை கிடைத்திலது.

‘பாரத்தொல் காப்பியம்' என்னும் வெண்பா நச்சினார்க்கினியர் உரையை‘விருத்தி' என்று கூறியிருப்பினும் தொல்காப்பியத்தில் காண்டிகை உரை என்னும் குறிப்பே உள்ளது.பத்துப்பாட்டு கலித்தொகை ஆகியவற்றி லும் 'விருத்தி' என்னும் குறிப்பு இல்லை. ஆதலால் இவ்வெண்பாப் பாடியவர் விருத்தி என்று கருதினார் என்று கொள்ளலாம். நச்சினார்க் கினியர் கருத்து அஃதன்று என்றும் கொள்ளலாம்.