உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெய்வச்சிலையார்

தொல்காப்பியச் சொல்லதிகாரத்திற்கு உரை கண்டாருள் ஒருவர் தெய்வச்சிலையார். அவருரை சொல்லதிகாரம் முழுமைக்கும்

கிடைத்துள்ளது.

பெயர்

'தெய்வச்சிலையான்’, 'தெய்வச்சிலைப் பெருமான்' என்பன கல்வெட்டுகளில் வரும் பெயர்கள். “அரையன் தெய்வச்சிலையான் எடுத்தகையழகியான்”, “இளையாழ்வார் தெய்வச்சிலைப் பெருமாள் ஆன விக்கிரம பாண்டிய காலிங்கராயர்” என்பன அவை. அவற்றால் ‘தெய்வச் சிலையார்' எனப்படும் பெயருடையார் பிறரும் இருந்தமை புலப்படும். கல்வெட்டு கூறும் தெய்வச்சிலையார் என்னும் பெயருடையாருள் முன்னவர், பாண்டி மண்டலத்துக் காகூர்க் கூற்றத்து வளமர் ஆன வேம்ப நல்லூரினர். பின்னைக் கல்வெட்டு நெல்லை மாவட்டத்து மன்னார் கோயிலில் உள்ளது . ஆதலால் இப்பெயருடைய இவ்வுரையாசிரியரும் பாண்டி நாட்டைச் சேர்ந்தவர் எனக் கொள்ள இடமுள்ளது.

காலம்

இவர்

ளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், ஆகியோரைப் பெயர் சுட்டாமல் மறுத்தெழுதிச் செல்கிறார். நச்சினார்க் கினியர் சேனாவரையர் ஆகியோர்க்கு இவர் முற்பட்டவர் எனின் இவர் பெயரை அவர்கள் சுட்டியிருப்பர். அதனால், அவர்களுக்கு இவர் பிற்பட்டவர் என்பது தெளிவாகின்றது. மேலும் “பெண்மையடுத்த மகனென் கிளவி” (சொல்.160) என்பதற்குப் பெண்மகன் என்று மாறோகத் தார் இக்காலத்தும் கூறுப என்று நிகழ்காலத்தால் சேனாவரையரும் கல்லாடனாரும் கூறினர். ஆனால் இவரோ “விளையாடும் பருவத்துப் பண்மகளைப் பெண்மகன் என்றல் பண்டையோர் வழக்கு” என இறந்த காலத்து நிகழ்வாகக் கூறினார். அதனாலும் சேனாவரையர்க்கும் கல்லாட னார்க்கும் பின்னவர் என்பது விளங்கும். இவற்றாலும் முற்காட்டப்பட்ட கல்வெட்டுகள் பதின்மூன்றாம் நூற்றாண்டின் இறுதியும் பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கமும் ஆகிய காலத்தன எனப்படுதலாலும்