உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

'எல்லாம்' என்பது உயர்திணைப் படர்க்கையிலும் முன்னிலை யிலும் வருவனவற்றை எடுத்துக்காட்டி “அவை இலக்கண வழக்கல்ல” (182) என்று மறுப்பு வகையாலும் மரபினைக் காக்கிறார்.

அஃறிணைக்கண் தன்மைக்கூற்று நிகழாது என்பதை, “கிளியும் பூவையும் ஆகிய சாதி எல்லாம் உரையாடும் என்னும் வழக்கின்மையானும், அவை உரைக்குங்கால் ஒருவர் உரைத்ததைக் கொண்டு உரைக்கும் ஆதலானும், ஒருவன் பாடின பாட்டை நரம்புக் கருவியின்கண் ஓசையும் பொருளும்பட இயக்கியவழிக் கருவியும் உரையாடிற்றாதல் வேண்டு மாகலானும் அவ்வாறு வருவன மக்கள் வினையாதலால் தன்மை வினை அன்றென்க” என உவமை நயத்துடன் விளக்கி மரபு காக்கிறார் (210). இத்தகையவர், ‘எல்லாச் சொல்லும் பொருள்குறித்தனவே' என்னும் நூற்பாவின் விளக்கத்தில் ஓருரை உரைத்துப் பின்னர், இன்னும் “எல்லாச் சொல்லும் எல்லாப் பொருளையும் குறித்து நிற்கும் என்றவாறு, எனவே, இச்சொல் இப்பொருள் உணர்த்தும் என்னும் உரிமை இல என்றவாறாம். என்னை உரிமை இலவாகியவாறு எனின், உலகத்துப் பொருள் எல்லா வற்றையும் பாடைதோறும் தாம் அறிகுறியிட்டு ஆண்ட துணையல்லது இவ்வெழுத்தினான் இயன்ற சொல் இப்பொருண்மை உணர்த்தும் என எல்லாப்பாடைக்கும் ஒப்ப முடிந்ததோர் இலக்கணம் இன்மையான் என்க. எனவே பொருள் பற்றி வரும் பெயரெல்லாம் இடுகுறி என்பது பெறப்பட்டது” (151), என்பது வியப்பாக உள்ளது. இது நூலாசிரியர் கருத் தொடு மட்டுமன்றி, தாம் உரைத்த உரைக்கும் முரணாக உள்ளமை

புலப்படுகின்றது!

சில வழக்குகள்

தைந்நீராடல், ஈழத்திற்கு ஏற்றின பண்டம், சுக்ரீவன் துணையாக இலங்கை கொண்டான் என அக்கால வழக்குகள், தொன்மக் குறிப்புகள் ஆகியவற்றை ஆங்காங்குக் காட்டுகிறார்.

'கூப்பிடு தொலைவு' என நீட்டல் அளவும், 'அந்தணி' என அந்தணனுக்குப் பெண்பாலும், நெயவு தொடர்பான பல செய்திகளும், நாண்மீன் கோண்மீன் குறிப்பும் இன்னபிறவும் இவர் உரைக்கண் காண வாய்க்கின்றன. அரசன் வலத்திருந்தான் அமைச்சன்; அரசன் இடத்திருந் தான் சேனாபதி என அரசிருக்கை காட்டுகிறார்; இந்நாளில் வேளாங்கன்னி என்றும், வேளாங்கண்ணி என்றும் வழங்கப்படுவது வேளாண்காணி அல்லது வேளார் காணி என்பதோ என்று நினைக்க வைக்கிறார்:

"வேளார்காணி என்பது வேளார் காணியிற் பிறந்த ஆடையை அப்பெயரால் வழங்குதலின் ஆகுபெயராயிற்று” என்பது அது (111). அடுத்த