உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

கூற்று என்றும், இறந்த காலத்துப் பிற பாசாண்டிகளும் (வேத வழக்கொடு மாறுபட்ட சமயத்தார்) நான்கு வருணத்தொடு பட்ட சங்கச் சான்றோரும் அது கூறார் என்றும் கூறுகிறார். மேலும் இக்கூற்றுக்குச் சான்றானவற்றை விரித்து விளக்கும் பேராசிரியர், "கடைச் சங்கத்தாருட் களவியற் பொருள் கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரர் இடை ச் சங்கத்தார்க்கும் கடைச் சங்கத்தார்க்கும் நூலாயிற்றுத் தொல்காப்பியம் என்றார் ஆகலானும், பிற்காலத்தார்க்கு உரையெழுதினோரும் அது கூறிக் கரிபோகினார் (சான்றுரைத்தார்) ஆகலானும், அவர் புலவுத் துறந்த நோன்புடையராக லாற் பொய் கூறார் ஆகலானும் என்பது" என்கிறார். பல்காப்பியம், பன்னிருபடலம், புறப்பொருள் வெண்பாமாலை முதலியவற்றுச் சான்று களையும் இவ்விடத்தே வரிசைப்படுத்திக் காட்டித் தம் கருத்தை நிறுவுகிறார் (மர. 94).

தொல்காப்பியம் முன்னூல் எனக் கூறும் பேராசிரியர், "மற்றுப் பல்காப்பியம் முதலியனவோ எனின், அவை வழிநூலே; தொல்காப்பியத் தின்வழித் தோன்றின என்பது" என்றுரைத்துப் பல்காப்பியம் காக்கைபாடினியம் இவைபற்றியெல்லாம் நிறுத்தி ஆய்ந்து கருத்துரைக் கிறார் (95).இத்தகைய அருமைப்பாடுகளையும், உரைநயங்களையும், தமிழ்நடை நலங்களையும் கண்ட பட்டறிவால், "பிறர்தம் உரை நெறிகளிலும் இவர்தம் உரைநெறி சாலச் சிறந்தது. இவர் தொல்காப்பியம் முழுமைக்கும் உரை வகுத்திருப்பரேல் அவ்வுரையே திருக்குறளுக்குப் பரிமேலழகர் உரைபோல் தலைமை யெய்தியிருக்கும்" என முனைவர் வ.சுப.மாணிக்கனார் பாராட்டுகிறார் (தொல்காப்பியத்திறன், பக். 23).

செய்யுளியல் இடமாற்றம்

செய்யுளியல், பொருளதிகாரத்தின் எட்டாம் இயல். இறுதியியல் மரபியல். சிலர் செய்யுளியலை இறுதியியலாகக் கொண்ட முறையும் பேராசிரியர் காலத்தில் இருந்தது என்பதை அவருரையால் அறிய வாய்க்கின்றது.

"இந்நூல் இலக்கணத்தினை இவ்வோத்தின் இறுதிக்கண் வைத்தான் வழக்கும் செய்யுளுமென்று விதந்து புகுந்த இரண்டிலக்கணமும் முடித் தல்லது அவற்றைக் கூறும் இலக்கணம் கூறலாகாமையின் என்பது. இக்கருத்தறியாதார் செய்யுளியலினை ஒன்பதாம் ஓத்தென்ப" என்கிறார் (மர. 93). இக்குறிப்பால், செய்யுளியல் ஒன்பதாம் இயலாக இருந்ததென்றும், அதனொடு நூல், நூல்வகை, உரை பற்றிய நூற்பாக்கள் அதன் நிறைவில் இருந்தன என்றும் எண்ணுதற்கு இடனுள்ளது. இதனை மேலாய்வு செய்தல் வேண்டத்தக்கதாம்.