உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

மணி அப்பா, மணி அம்மா (மணிக்கு அப்பா, மணிக்கு அம்மா) என வழங்கும் வழக்கம் தொல்காப்பியர் நாள் பழமையது.

ஆதன் தந்தை (ஆந்தை)

பூதன் தந்தை (பூந்தை)

என்பன போல வழங்கப்பட்டவை. ஆதன் பூதன் என்பவை அந்நாள் பெருந்தக்க பெயர்கள்.பிசிராந்தையார், பூதனார், பூதத்தார், நல்லாதனார், நப்பூதனார் என்றெல்லாம் புகழ் வாய்ந்தோர் பலர் ஆவர்.

வல்

இந்நாள் பரிசுச் சீட்டுக்கு முன்னோடியான சூதாட்டத்தின் அகவை’ மிகப் பெரியது. தொல்காப்பியர் நாளிலேயே சூதாட்டக் காய், ஆடும் அரங்கமைந்த பலகை என்பன இருந்தமையால் அவற்றின் இலக்கணத்தையும் கூறுகிறார் (374 - 375).

ஆடு, புலி, குதிரை வைத்து ஆடும் ஆட்டங்களைப் போல் ‘நாய்’ வைத்து ஆடியுளர் என்பது நாயும் பலகையும் (கட்டமிட்ட அரங்கப் பலகை) என்பதால் தெரிகின்றது. சூதின் தன்மையை வள்ளுவம் “ஒன்று எய்தி நூறு இழக்கும் சூது” என்பதால் வெளிப்படுத்தும். அதன் கொடுமையை வெளிப்பட உணருமாறு ‘வல்' என்று பெயரிட்டிருந்த ஆழ்ந்த சிந்தனையர், எண்ணத்தக்கார் (374).

தமிழ்

கதவு, தாழ் என்பவை வீடு தோன்றிய பாதுகாப்பு உணர்வு ஏற்பட்ட நாள் முதலே உண்டாகி யிருக்கும். “வழியடைக்கும் கல்” என்பது பாதுகாப்புத் தானே.

தாழ் கதவொடு கூடியது. பூட்டு என்பது தாழ்க் கதவொடு இணைந் திருப்பதனை அன்றித் தனியே எடுத்து மாட்டுவதாகவும் அமைந்துளது. பாதுகாப்பில் எத்தனையோ புதுமைகள் ஏற்பட்டுள்ளன. எனினும் தாழ்க் கோல், திறவுகோல், திறப்பான் குச்சி, திறவு என்னும் பழம் பெயராட்சிகள் வழக்கில் மறையாமல் வாழ்ந்துகொண்டுள்ளன.

தாழைத் திறக்கும் கோல் தாழக் கோல் எனவும் தாழ்க் கோல் எனவும் வழங்கும் என்று கூறிய தொல்காப்பியர் தமிழ் என்பதை விட்டுவிடாமல், “தமிழென் கிளவியும் அதனோர் அற்றே” என்கிறார். தமிழ்த் தெரு, தமிழத் தெரு; தமிழ்க் கலை, தமிழக் கலை என வழங்கும் வகையை தனால் காட்டுகிறார். திராவிடத்தில் இருந்து தமிழ் வந்தது என்பாரை இத் தொல்காப்பிய விளக்கம் தண்ணீர் தெளித்துக் கண் விழிக்கச் செய்ய வல்லதாம்.