உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

'நா' (நாம்) என்பதும் அச்சப் பொருள் தருதல் ‘நாமநீர்' என்னும் கடலலைப்பால் புலப்படும். நாயும் அச்சப் பொருளாதல் அறிந்தது.

உரும்

உரும் அச்சமாதல் விலங்குகள் உருமுதலால் விளங்கும். உரும் இடியும் ஆகும். உரும் வழியே உண்டாகிய ‘உருமி'க் கொட்டு, கேட்ட அளவால் அசைப்பது தெளிவு. இவற்றைத் தொகுத்து

“பேம் நாம் உரும் என வரூஉம் கிளவி

ஆமுறை மூன்றும் அச்சப் பொருள”

என்றார். 'உரு' என்பதை மட்டும் தனியே எடுத்து “உரு உட்கு (அச்சம்) ஆகும்” என்றும் கூறினார். கண்டறியாத் தோற்றங்களும் விலங்குகளும் பாம்பு முதலியனவும் அஞ்சச் செய்தலை எண்ணி ‘உரு' எனத் தனித்துக் கூறினார். அவர்தம் விழிப்புணர்வு வெளிப்பாடு இன்னவையாம்.

ஆய்தல்

ஆய்தம்' என்னும் எழுத்து முப்பாற்புள்ளி வடிவினது; ஆய்தப் புள்ளி என்பதும் அது; அஃகேனம் என்பதும் அதற்கொரு பெயர்; என்பவற்றைக் கூறும் ஆசிரியர், ஆய்தம் என்பதன் பொருள் 'நுணுக்கம்’ என்கிறார்.

“ஓய்தல் ஆய்தல் நிழத்தல் சாஅய்

ஆவயின் நான்கும் உள்ளதன் நுணுக்கம் ”

என்பது அது.

‘ஆய்வுப் பட்டறை' எனப் பெயரிட்டு ஆய்வாளர் பலர் கூடித் திட்ட மிட்டுச் செய்து வரும் தொடர் நிகழ்வாகிய அதன் பெயர் தானும் பிழையாயது என்பது அறியாமலே ஆய்வுகள் நிகழ்கின்றன.

என்பது

‘பட்ட டை ட' என்னும் சொல் தொழிலகப் பெயர். ‘பட்டடை

“சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை நேரா நிரந்தவர் நட்பு”

என வள்ளுவரால் ஆளப்பட்ட சொல் (821) ஆய்தல் என்பது நாட்டுப்புறப் பெருவழக்குச் சொல். கீரை ஆய்தல், கொத்தவரை ஆய்தல் என்று கூறுதல் இந்நாள் வரை மாறியதில்லை.

முற்றல் அழுகல் பூச்சி முதலியவை போக்கித் தக்கவற்றைத் தேர்ந்து கொள்ளுதலே ஆய்தல் பொருளாக அமைகின்றது. ஆய்தலினும் நுணுக்க ஆய்வு 'ஆராய்தல்' (ஆர் ஆய்தல்). ஆய்வும், ஆராய்வும் கொள்ளுவ கொண்டு தள்ளுவ தள்ளும் நுண்ணிய நோக்குடைய சொற்கள்.