உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 19.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம் - 19

இலக்கணமாம் பொருள் இலக்கணமும், மொழி இலக்கணத்துடன் இணைத்துத் தமிழில் கூறப்பட்டமை பெருமிதமும் விந்தையும் உடையதாம்.

தொல்காப்பியக் கொடைவளத்திற்குப் பாரிய சான்றாக விளங்குவன திருக்குறள்,பாட்டு, தொகை என்னும் பழமை சான்றவை.

தொல்காப்பியர் வகுத்தருளிய அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் விளக்கமாகத் திகழ்வது திருக்குறள். பாட்டு தொகைகளில் அமைந்த பாடல்கள் அனைத்தும் தொல்காப்பிய அகம், புறம் ஆகிய பொருள் விளக்கமாய்த் திணை, துறை கொண்டு அமைந்தவை. பின்வர வாகிய நூல்களும், தொல்காப்பியப் பெருமணி மாலையில் ஒன்றும் பலவுமாய் எடுத்துக் கொண்டு கோக்கப் பெற்றவையே.

இனித் தொல்காப்பியம் போல விரிவிலக்கணமோ முழுதுறு இலக்கணமோ கொள்ளாத நூல்களும், தொல்காப்பியச் சார்பாய், சார்பின் சார்பாய் வெளிப்பட்டவையே.

தமிழ் நெறிக்கு அயலாகவும் மாறாகவும் தோன்றியன தாமும், தொல்காப்பியத்தை வேண்டுமாற்றால் பயன்படுத்திக் கொண்டு புற்றீச

லாய்ப் புறப்பட்டவையேயாம்.

ஆகையால், தமிழர் வாழ்வியல் அளவுகோல் என அமைந்த தொல்காப்பியப் பொருளியல் வாழ்வு விரிவு மிக்கதாம்.

பொருளதிகாரத் தொடக்கம் அகவாழ்வில் கிளர்கின்றது. ‘அகத் திணை இயல்' என்பது அது அக வொழுக்கம் பற்றிக் கூறுவது என்பதே அதன் பொருளாம்.

அகம்

அக வாழ்வு என்பது, இல்வாழ்வு, இல்லற வாழ்வு, உள்ளத்தால் வாழும் உணர்வு வாழ்வு!

புற வாழ்வு என்பது, அக வாழ்வில் இருந்து கிளர்ந்து விரிவாக்க முற்று உலக வாழ்வாகத் திகழ்வது. அக வாழ்வு என ஒன்று இல்லாக்கால் புற வாழ்வு என ஒன்று அரும்பியிருக்கவே இயலாது! அகம், புறம் என்பது ஆட்சியே அன்றிப் புறம், அகம் என ஆட்சி இல்லையாம்.

அறம்

அறம் என்பதன் தோற்றமே, அகவாழ்வின் தோற்றமாம்!

தக்காள் ஒருத்தி தக்கான் ஒருவன் உள்ளத்திலோ, தக்கான் ஒருவன் தக்காள் ஒருத்தி உள்ளத்திலோ பதிவாகும் நிலைக்கு ‘அறம்' எனப் பெயர் சூட்டியவர் தமிழ் மூதறிவாளர். அதனைப் போற்றி உரைத்தவர் தொல்