உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

107

5. இலை

திருக்குடந்தையில் திருத்தங்கி, மருத்தன் என இருவர் இருந்தனர். அவர்களுள் திருத்தங்கி ஈயாத கருமி; மருத்தன் பெருவள்ளல். இருவரும் வாழைத் தோட்டம், வைத்திருந்தனர். திருத்தங்கியின் வாழைத் தோட்டம் இலையறுக்கப்படாமலும், பூப்பறிக்கப் படாமலும், குலை வெட்டப்படாமலும் பார்க்க அழகாக இருந்தது. மருத்தன் வள்ளல் ஆதலால், நாள்தோறும் பலர் விருந்துண்ண வருதலால் குருத்தும் இலையும் பூவும் காயும் இல்லாமல் இருந்தது. இத் தோட்டங்களை ஔவையார் கண்டார்! புகழ்வது போலப் பழித்துத் திருத்தங்கியைப் பாடினார். பழிப்பது போலப் புகழ்ந்து மருத்தனைப் பாடினார்! வாழை பொலிவாகத் தோற்றம் அளித்தது கருமித்தனத்தாலும், பொலிவிழந்து தோன்றியது வள்ளல் தன்மையாலும் அல்லவா? “திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்; மருத்தன் திருக்குடந்தை வாழை-குருத்தும் இலையுமிலை பூவுமிலை காயுமிலை என்றும் உலகில் வருவிருந்தோ டுண்டு"

தேம் - இனிமை (பார்க்க இனிமை). திருக்குடந்தை - கும்பகோணம். 'உண்ணுதலால் இலை' என்னும் நயம் கண்டு இன்புறத்தக்கது.