உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

135

33. அவாள்

திருமலைராயன் என்னும் மன்னன் காளமேகப் புலவரால் மிகப் பாராட்டப் பெற்றவன் ஆவான். அவன் கையில் இருந்த வெற்றி தரும் வீர வாளின்மேல் புலவர் பார்வை சென்றது. அவ்வொன்றே ‘வாள்' என்று சொல்லும் பெருமைக்குரியது. மற்றையோர் கையில் உள்ள வாள்களெல்லாம் வாள்களல்ல. அவை, 'போவாள்' 'வருவாள்' 'புகுவாள்' 'புறப்படுவாள்' ‘ஆவாள்’ ‘அவாள்’ அவாள்' 'இவாள்' ஆகும் என்றார்.

'போவாள் வருவாள்' முதலாக ஒரு பெண்போல நகைப்புறக் கூறினாலும், 'போகும் வாள்' ‘வரும் வாள்’ ‘புகும் வாள்’ புறப்படும் வாள்’ ‘ஆகும் வாள்’ ‘அந்த வாள்’ ‘இந்த வாள்’ ‘என்று பெயரளவில் சொல்லப் படுவதன்றி ‘வீர வாள்’ என்றோ ‘வெற்றி வாள்' என்றோ பேசும் பேற்றைப் பெறாது என்னும் பொருள் வைத்துக் கூறினர் புலவர்.

“செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில் வெற்றிபுரி யும்வாளே வீரவாள் - மற்றையர்வாள் போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள் ஆவாள் இவாள் அவாள் ஆம்."

செற்றலர் - பகைவர். மற்றையர் - பிறர்.