உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

60. ஏன்?

அந்தகக்கவி வீரராகவர் கண்ணொளியற்றவர்; எண்ணும் எழுத்தும் கண்ணாகக் கொண்டு கவி வீர ராகவர் என்னும் பெயரோடு விளங்கியவர்; அரிய நூல்கள் பலவற்றைப் படைத்தவர். வீரராகவர் தமிழ்நாடு முழுமையும் சுற்றி வந்தார். லங்கைக்கும் சென்றார். அங்குப் பரராச சிங்கன் என்னும் பெயருடைய மன்னன் ஒருவன் ஆட்சி செலுத்தி வந்தான். கண்ணொளி இல்லாத புலவரை வரவேற்றுப் பாராட்ட அவன் விரும்பவில்லை. பின்னர்ப் புலவர்தம் புலமைத் திறனைக் கேள்விப்பட்டு வரவேற்க இசைந்தான்.

புலவர் வரும் வழியில் தன் கையில் வில்லை வைத்துக் கொண்டு நின்றான் பரராசன். உள்ளொளி மிக்க புலவர் வேந்தன் விற்பிடித்து நிற்பதை உணர்ந் தார்; உடனே, “இங்கே இராவணன் இல்லை; மாரீசனாகிய மான் இல்லை, மராமரங்களும் இல்லை; அவ் வாறாகவும் வில்லை எடுத்துக் கொண்டு நீ எதற்காக நின்றாய்? என்பதைச் சொல்லுவாயாக என்னும் பொருளமைய ஒரு பாட்டுப் பாடினார், வேந்தன் திகைப்பும் வியப்பும் அடைந்து புலவரை நன்கு போற்றினான். “வாழும் இலங்கைக்கோ மானில்லை மானில்லை;

ஏழு மராமரமோ ஈங்கில்லை - ஆழி

அலை அடைத்த செங்கை அபிராமா! இன்று சிலையெடுத்த வாறெமக்குச் செப்பு.”

இலங்கைக் கோமான்

இராவணன். மான் - மாரீசன். ஆழி - கடல். அலை அடைத்த – கடலில் அணை கட்டிய. அபிராமா - அழகனே. சிலை - வில். செப்பு - சொல்லு.