உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

171

69. கோமான்

பொன்னம்பலம் பிள்ளை என்பவர் சிறந்த புலவர். அவர் சேற்றூர் பெருநிலக் கிழாரைக் காணச் சென்றார். சேற்றூர் பெருநிலக்கிழார் சிவப்பிரகாச திருவநாத துரை என்பவர். அவர் புலவர் வந்ததைக் கேள்வியுற்று உண்டுகொண்டிருந்த கையோடே வரவேற்க வந்தார். மற்றைக்கையில் பொன்னை அள்ளிக்கொண்டு வந்தார். முகமும் அகமும் மலர வர வேற்றார். அவர் தம் உளமாண்பும், கொடைமாண்பும் புலவரை இன்பக் கடலில் ஆழ்த்தின. அதனால் “ஒரு கையில் சோறும், ஒரு கையிலே பொன்னும் வருகையிலே இனிய சொல்லும் உடையவராக வரவேற்பது எங்கள் சிவப்பிரகாச துரைக்கு இயல்பான குண மாகும்.” என்னும் பொருளமைய ஒருபாடல் பாடினார்.

“ஒருகையிலே அன்னம்; ஒருகையிலே சொன்னம்; வருகையிலே சம்மான வார்த்தை; - பெருகுபுகழ்ச் சீமானாம் எங்கள் சிவப்பிரகா சத்திருவக் கோமானுக் குள்ள குணம்.

சொன்னம் – சொர்ணம் (பொன்) சம்மான வார்த்தை - இனிய புகழ்மொழி. சிவப்பிரகாசத்

திருவக் கோமான் - சிவப்பிரகாச திருவநாத துரை.