உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கல்விச் செல்வம்

கல்வி என்பது செல்வமா? ஆம்! செல்வமே தான். செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம் கல்வியே ஆகும்.

செல்வம் என்பது எது?

மனநிறைவைத் தருவது எதுவோ அதுவே செல்வம். செல்வம் என்பது சிந்தையின் நிறைவே' என்றார் குமரகுருபரர். கல்வியைப் போல் மனநிறைவு தரும் ஒன்று இல்லவே இல்லை. ஆதலால், கல்வியே சிறந்த செல்வம் என்பது தகும்.

எந்தச் செல்வமும் எவ்வளவு வளர்ந்தாலும் பெருகினாலும் போதும் என்ற மனநிறைவு ஏற்படாது. ஆனால், கற்றது போதும் என்னும் மனநிறைவைக் கல்வி வழங்கும். இதனைக் “கற்பனவும் இனி அமையும்” என்னும் தாயுமானவர் வாக்கால் நன்கு அறியலாம்.

கு

கல்வி உள்ளப் பொருள். என்றும் அழியாமல் உள்ள பொருள். தன்னை உடையவனையும் உள்ளவன் ஆக்கும் பொருள். உலகைப் படைத்தவன் ஒருவன் உளன் என்பதை உணர்த்தும் உண்மைப் பொருள் ஆதலால்,

“கைப்பொருள் தன்னின் மெய்ப் பொருள் கல்வி”

என்றார் ஔவையார்.

வெள்ளம் ஆடு மாடுகளை அடித்துச் செல்லும்; நிலபுலங் களிலுள்ள மண்ணையும் விளைவையும் வாரிக்கொண்டு ஓடும்; பள்ளத்தை மேடாக்கும்; மேட்டைப் பள்ளமாக்கும். ஆனால், எந்த வெள்ளத் தாலும் கல்விச் செல்வம் அடித்துக் கொண்டு போகப் படாது.

தன்னை நெருங்கிய பொருளை எல்லாம் சுட்டெரிக்க வல்லது தீ. அத் தீயானும் சுட்டெரிக்க முடியாதது கல்வி.