உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனிப்பாடல் கனிச்சுவை

185

83. கையிரண்டு

சந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர் செய்த தவப் பயனாகத் தோன்றியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. குழந்தைப் பாடல்கள் மிகுதியாகப் பாடிய பெருங் கவிஞர் அவர். குழந்தை உள்ளம் படைத்த அவர் குழந்தை போலவே கள்ளங் கபடம் எள்ளளவும் இன்றி வாழ்ந்தார். அவருக்கு ஒரு சமயம் 'சிரங்கு' பற்றிக் கொண்டது. புலவர்க்குச் சிரங்கு வந்தால் மற்றவர் சிரங்குபோல் போய்விடுவதில்லை. அதற்குப் புகழ் ஏற்பட்டு விடுகின்றது. பெரியாரைத் துணைக் கொண்ட பெருமை அதற்கு மட்டும் வாய்க் காமல் போகுமா?

கவிமணி வழிபடு கடவுளாகிய முருகனிடம் வேண்டினார்: “திருச்செந்தில் குமரனே, திருமாலின் மருகனே, என் உள்ளத்தில் குடிகொண்டவனே, மெலிந்த என் உடலில் பற்றிக் கொண்ட சிரங்கை விடியுமளவும் சொறிவதற்கு இரண்டு கை போதாது” என்றார். பன்னிரு கையனிடம் இருகை போதாது என்றது நயமிக்கது அல்லவா!

“செந்தில் குமரா! திருமால் மருகா! என் சிந்தை குடிகொண்ட தேசிகா! - நொந்தஇம் மெய்யிற் சிரங்கை விடியுமட் டுஞ்சொறியக் கையிரண்டு போதாது காண்.

செந்தில் – திருச்செந்தூர். மருகா - மருகனே. சிந்தை – மனம். தேசிகன் - குரு. மெய்

- உடல்.