உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

14. விதை நெல்

விருந்தோம்பல் உலகளாவிய ஓர் உயர்பண்பு. விருந்து போடுதல், விருந்து அளித்தல், விருந்து செய்தல் என்னாமல் விருந்தோம்பல் என்பது தமிழ்நெறி. தன்னைத் தான் பேணுவது போல், புதியவராக வருவாரைப் பேணுதல் விருந்தோம்பல் எனப்படும். கணவன் மனைவியர்க்குள் சிறுசினம் இருப்பினும் புதியராக வருவாரைக் கண்ட அளவில் தம் சினத்தை மறந்து விருந்தோம்பலில் ஈடுபடுவர். இதனை 'விருந்து கண்டு ஒளித்த ஊடல்' என்பார் தொல்காப்பியர்.

விருந்தினரைப் பேண வீட்டில் வாய்ப்பில்லாத நிலையில், வருங்கால விளைவுக்கு மூலமான விதை நெல்லைக் குத்தியும் விருந்து செய்வார் உண்டு. எவ்வளவு வறுமையிலும் தமக்கென விதை நெல்லை இடித்துப்பயன்படுத்தாதவரும் விருந்தோம்புதற்குப் பயன்படுத்துவர் என்பதைக் கண்டார் திருவள்ளுவர். அதனால் “வித்தும் இடம்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி மிச்சில் மிசைவான் புலம்

என்றார்.

“விருந்தினர்க்கு வழங்கி மீதத்தை உண்பவன் தன் நிலத்திற்கு விதை இடவும் விரும்புவனோ? மாட்டான்” என்பது இதன் பொருளாம். இளையான் குடிமாறனார் வயலில் இட்ட விதை நெல்லை அரித்து வந்து அரிசியாக்கிச் சமைத்தது பெரிய புராணச் செய்தி.

“வித்து அட்டு உண்டனை” என்பது ஔவையார் மொழி. பொதுமக்களும் இதனைப் புரியார் அல்லர். அவர்கள் வாக்கிலே

“விதை நெல்லைக் குத்தி விருந்து வைத்தல்”

என வழங்குகின்றது. இவ் வழக்குச் சொல் இக் குறளின் பொருளைத் தெளிவாகவும் விளக்கிவிடுகின்றது.