உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுமக்கள் பேச்சில் பொய்யாமொழி

233

26. செத்தவன்

உயிரோடு இருக்கும் ஒருவனைச் 'செத்தவன்' என்பது உலகவர் வழக்கு. சாக வேண்டியவன் சாகாமல் இருந்தால் அவனைச் ‘சாவாரம் செத்தவன்' என்பதும் உண்டு. அத்தொடர் வழுவமைந்த தொடராம். சாகத்தக்க குறைகளை யுடையவன் சாகாவரம் பெற்றதால் சாகாமல் கிடக்கிறான் என்பது கருத்தாம்.

திருவள்ளுவர், உயிரோடு இருப்பார் சிலரைச் செத்தாருள் வைக்கத் தக்கவராகக் குறிப்பிடுவார்; இறப்பு, விளிவு முதலிய சொல்லைக் குறித்தும் கூறுவார்.

“விளிந்தாரின் வேறல்லர்" (143)

"சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும்” (173) “செத்தாருள் வைக்கப் படும்” (214)

"இறந்தார் இறந்தார் அனையர்" (310)

"துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்" (926) “உளரெனினும் இல்லாரோடு ஒப்பர்” (730)

வை அத்தகையவை. பிறர்மனை நயப்பார், புறங் கூறுவார், ஒத்தது அறியார், சினமிக்கார், துஞ்சினார், களனஞ்சுவார் இன்னவர் உயிருடன் இருப்பவர் எனினும் இல்லாதவராகக் கொள்ளும் இப்பார்வை, பழிவழிப்பட்டவர் உயிருடையவர் ஆகார் என விளக் கும். இன்றும் இவ்வாறு கூறுதல் உண்டு என்பதை உயிருடன் இருப்பவனைச் செத்த பயல், என்றும் சாகமாட்டாதவன் என்றும் பொது மக்கள் வசை மொழியாகப் பயன்படுத்துதல் எண்ணத்தக்கது.

உயிருடையவர் என்பதற்கு உரிய அடையாளம் என்ன? ஆக்கவழியில் இயக்கம்! அவ்வியக்கம் இல்லாதவன் உயிரோடு இருந்தாலும் செத்தவன் தானே!