உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

9

வெளிப்படாது தடை செய்து வைத்திருக்கிறது. கல்வி என்னும் விளக்கை ஏற்றி வைத்தால் அத்திரை அகல்கிறது. அங்கே மறைந்து கிடந்த அறிவு வெளிப்பட்டுச் செயலாற்றுகின்றது. இயல்பாக ஓரிடத்து மறைந்து இருந்த நீரையே ஊற்று வெளிக் கொண்டு வந்தாற்போல, இயல்பாக ஒருவரிடத்து அமைந்து இருக்கும் அறிவையே கல்வி வெளிப்படுத்துகின்றது. இக் கருத்துக்களை யெல்லாம் புலப்படுத்து மாறு வள்ளுவர் “தொட்டனைத் தூறும் மணற்கேணி” என்னுங் குறளை இயற்றியுள்ளார்.

இனிக் கல்வி மேலோட்டமாக அமையாது என்பது அதன் பெயராலேயே விளங்கும். நீரில் எழுதிய எழுத்து - நீர்ப் பூச்சிகள் செல்வதால் நிலத்தில் அமையும் கோடுகள் - நிலைக்குமா? ஆனால், கல்லில் எழுதிய எழுத்து கல்லுள்ள அளவும் நிலைக் கின்றது அல்லவா! நம் முன்னோர் கட்டி வைத்த திருக்கோயில் சுற்றுகளில் உள்ள கல்வெட்டுகளைப் பாருங்கள்! எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நிலைத்து நின்று வரலாற்றுப் பெட்டகங் களாகத் திகழ்கின்றன. அவ்வாறு நிலைக்கத் தக்கவாறு கற்பதே கல்வியாம்.

66

க்

அழுத்தமான கல்வி அமைய வேண்டும் என்றே, “ஓதுவது ஒழியேல்" என்றார் ஒளவையார். “ஓதி மறப்போன் ஓட்டைக் குடமே” என்றார் இன்னொருவர். ஓதினால் மட்டும் போதுமா? நூறு நாள் ஓதி ஆறு நாள் விடத் தீரும்” என்பதல்லவா பழமொழி! அதனால், “பாடம் ஏறினும் ஏடது கைவிடேல்” என்றனர். இதனையே சற்று மாற்றியும் கூறினர். “பாடை ஏறினும் ஏடது கைவிடேல்" என்பது அது.

கற்பன கற்று - அழுத்தமாகக் கற்று - மீண்டும் மீண்டும் நினைத்தும் சொல்லியும் ஒழியாமல் கற்று வருவது கல்வியாகும். இதனையே, “சாவாமல் கற்பதே கல்வி" என்று நம் முன்னோர் கூறினர். நாம் கற்ற கல்வி சாவாததாக இருக்குமானால், அதனைக் கற்ற நம்மைச் சாவாத நிலைமையில் வைக்குமல்லவா! இதனால் தான் வள்ளலார், “சாவாக் கல்வி" பற்றிப் பன்முறை கூறினார்.

சாவாக் கல்வி எத்தகையது? அழியா இறைவனைப் போன்றது. ஆதலால், ‘அறிவே கடவுள்' என்று ஆன்றோர் கூறினர். அறிவே ஆண்டவன் ஆவது எப்படி?