உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

13

இனி, இன்புறுத்தும் நூல்கள் என்பன நல்ல பொழுது போக்குக்குப் பயன்படுவதுடன், மகிழ்ச்சி யூட்டுவனவாகவும் இருப்பன. சிறு கதைகள், தொடர் கதைகள் ஆகியன இவ் வகையைச் சேர்ந்தவை. இக் கதைகளிலும் இலக்கியம் என்று பாராட்டக்கூடிய பெருமையுடையவையும் உண்டு. அத்தகையவை இன்பத்தைத் தருவதோடு பண்படுத்தவல்லனவாகவும் அமையும்.

ஆனால், கையால் தொடக் கூடாத அளவு இழிந்தவையும் நூல் என்னும் பெயருடன் உலா வருவதுண்டு. அவை வேண்டாத உணர்ச்சிகளைத் தூண்டியும் கண்ணால் காணவும் கூடாத படங் களைப் போட்டு வயப்படுத்தியும் பணம் ஈட்டுவது ஒன்றே குறியாக வெளிவரும் கீழ்த்தர நூல்களாகும்; நூல் என்ற பெயர்க்கே இழுக்குத் தேடித் தருபவையாகும்.

படைக்க

ஒரு தாய் தன் மக்களுக்குச் சுவையான உணவுகளைப் க்க விரும்பி அன்பைக் குழைத்துத் தன் கைத்திறனைக் காட்டி ஆக்கிப் படைப்பாள். சுவையாக இருக்க வேண்டும் என்பதில் அவள் கருத்து இருந்தால் கூட உணவு உடல் நலந்தருவதாகவும், ஊட்ட மிக்க தாகவும் இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கருத்துச் செலுத்துவாள். சுவையைக் கருதி உடல்நலத்திற்குக் கேடு செய்யும் எவ்வுணவையும் எப் பண்டத்தையும் அவள் ஆக்குவதும் இல்லை; படைப்பதுவும் இல்லை.

இத்தகைய தாய்மைத் தன்மையமைந்த எழுத் தாளர்களின் படைப்பே நலமிக்க படைப்பாகும். இத் தன்மை இல்லாமல் உடலுக்கு எவ்வளவு கேடானதாக இருந்தாலும் நாவுக்கு மட்டும் சுவையாக அமைத்துப் பணம் திரட்டுவதையே குறியாகக் கொண்ட கீழ்த்தரமான உணவு விடுதிக்காரனைக் போன்ற எழுத்தாளர்களின் படைப்பு கற்கத் தகாத நூல்கள் ஆகும்.

இன்னும் சொல்வதானால் விடுதிக்காரனுடையகேட்டினும் மிகக் கேடானது கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் எழுத்தாளன் படைப்பு. ஏனெனில், தீய உணவு உடல் நலத்தை மட்டும் கெடுக்கும்; தீய நூலோ உடலையும் உள்ளத்தையும் உயிரையும் ஏன் உலகையும் கெடுக்கும் கொடுமை வாய்ந்தது. ஆதலால், ‘கற்பவை கற்க' என்பது பொன்னே போல் போற்றிக் காக்கத்தக்க மொழியாகும்; கற்பவர் அனைவரும் மேற் கொள்ளத்தக்க கடமையுடையதும் ஆகும்.