உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விச் செல்வம்

19

எதிர்காலம் அல்லது வருங்காலம் அறியாதவர் வாழ்வு நெருப்பின் முன் வைக்கப் பெற்ற வைக்கோற் போர்போலக் கெடும் என்றும் உவமையால் திரு வள்ளுவரே தெளிவாக்கினார். “வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும்

என்பது அவர் வாக்கு.

எந்தக் கருவியாயினும் சரி, எவர் துணையாயினும் சரி, எத்தகு செல்வமாயினும் சரி உற்ற பொழுதில் உதவிக்கு வந்து ஒருவனைக் காக்குமென்று சொல்லி விடமுடியாது.“தலையிலே பாம்பு மலையிலே மருந்து” என்பது போல ஆகிவிடும். ஆனால், அவன் பெற்றுள்ள அறிவே அற்றம் காக்கும் (அழிவு வராமல் காக்கும்) கருவியாகும்; எப்பகைவர் எப்படை கொண்டு தாக்கினாலும் உட்புகுந்து அழிக்க முடியாத வலிய கோட்டை போலவும் அறிவு நிமிர்ந்து நிற்கும். இக் கருத்துக் களையும் வள்ளுவமே நமக்கு வழங்கி உதவுகின்றது.

"போகாத இடந்தனியே போக வேண்டா” என்பர். போகாத இடந்தனில் போவது அறிவுடைமை அன்று. அங்குப் போக்குவது அறிவும் அன்று. தீய நெறியில் மனம் போனால் அங்குப் போகவிடாமல் திருப்பி நல்வழியில் செலுத்துவதே அறிவு ஆகும்.தீமைப் படுகுழியில் கண்ணை மூடிக்கொண்டு வீழ் வதோ, தீமை எதிரே வந்தால் அதனைக் கட்டிப் பிடித்து அணைத்துக் கொள்வதோ, முட்டிக் கொண்டு மோதுவதோ அறிவுடைமையாகுமோ? தீயைக் கண்டதும் அப் பக்கம் பாராமல் திரும்புதலே அறிவுப் பயன்.

இனி, அறிவின் தலையாய பயன் பிறிதுயிர் படும் துயரைத் தன் துயராகக் கருதி, அத்துயரை மாற்றுவதற்குப் பாடுபடு வதாகும். “எனக்கு வரும் துயரும், என் குடும்பத்திற்கு வரும் துயருமே என்னால் போக்கப்பட வேண்டியவை; மற்றையோர் துயர் பற்றி எனக்கென்ன கவலை” என்று வாழ்ந்தால் அவர்கள் படும் துயருக்குக் கண்ணீர் வடிப்பவர்களும் அவர்களாகவே ருப்பர்! வேறு எவர் துணைக்கு வருவார்?

பிறிதின் நோயைத் தம் நோயாகக் கருதாதவர் அறிவுடையவர் அல்லர் என்பதை அறைந்து கூறுகிறார் அறவோர் திருவள்ளுவர்.