உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

இளங்குமரனார் தமிழ் வளம் - 20

“உள்ளொன்று வைத்துப் புறமொன்று" பேசுபவன் என்னும் எண்ணத்தை உண்டாக்கத் தவறாது.“கெட்டிக்காரன் பொய்யும் எட்டு நாளில் தெரியும்” என்பது பழமொழியல்லவா! இனிமையாகக் கூறுவது என்பது இல்லாததைக் கூறுவதுஆகாது

என்க.

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் உள்ளதை உள்ளவாறே, நடந்ததை நடந்தவாறே கூறுவதாம். அதற்காக உள்ளதை உள்ளவாறே கூறுகிறேன் என்று பிறர்க்குத் தீமை தருபவற்றைக் கூறுவது கூடாது. அதனால்தான் அறங்கூற வந்த பெரு நாவலர், "பிறர்க்குத் தீமை தாராத சொற்களையே வாய்மைச் சொல்” என்று கூறினார். ஆதலால், பிறர்க்கு நன்மை தரும் சொல்லே நற்சொல் என்றும், வாய்மைச் சொல் என்றும் பெரியோர்களால் கொள்ளப் பெறும். அத்தகைய சொற்களைக் கூறுதல் வேண்டும்.

பொய் கூறுவது அச்சத்தின் அடையாளம்; அது வலுவடைந்து வஞ்சத்திற்கு வித்தாக அமைந்து விடும். ஆதலால் தான் ‘பொய் கூறாமை'யை ஒருவன் சிக்கெனக் கடைப்பிடித்தால் வேறு எந்த அறங்களைச் செய்யாவிட்டால் கூட நல்லதே என்றார் திருவள்ளுவர்.

“பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று”

என்பது அவர் வாக்கு.

பதி இழந்தும், பாலனை இழந்தும், நிதி இழந்தும், நாடு நகர் இழந்தும் பொய் கூறுவதற்கு இசையாத அரிச்சந்திரன் புகழ்பாடும் நாட்டிலே பொய் கூறுவதை நெய்ச் சோறு என்று கொள்ளும் மக்கள் பெருகி யுள்ளமை இழிவேயாம்.

அரிச்சந்திரன் வாய்மை வாழ்வை நாடகத்தில் கண்டு தம் வாழ்வையே வாய்மைப் பொருளாக்கிக் கொண்ட காந்தியடிகள் பொய்யை மலச் சிக்கலுக்கு ஒப்பிடுகிறார். மலச்சிக்கலே மற்றை மற்றை நோய்களுக் கெல்லாம் அடிப்படை நோய். அது போல் பொய்யே எல்லாக் குற்றங்களுக்கும் அடிப்படைக் குற்றம். ஆதலால், பொய் கூறாமையை நோன்பெனக் கொள்ளுதல் வேண்டும்.