உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 20.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இளங்குமரனார் தமிழ் வளம் – 20

பத்தும் செய்யும்" என்றும், “முன்னுவ எல்லாம் பொன்னால் முடியும்” என்றும் நம் முன்னோர் கூறினர். “மலைமேல் இருந்து கொண்டு கீழே நடக்கும் யானைப் போரை எவ்வளவு எளிதாகக் காணலாமோ அவ்வளவு எளிதாகச் செல்வமுடையார் எச் செயலையும் முடித்துக் கொள்ளலாம்” என்று திருவள்ளுவர் உவமையால் விளக்குகின்றார்.

பொருள் உடையவனுக்குப் பெருமையும், அறப்பேறும் ன்ப நலமும் வாய்க்கும் அளவில் நிற்பது சிறப்பன்று. அதனினும் விரிந்து செல்வதே பொருட் பயனாகும்.

ஊருணி நீர்' யாருக்கு உரிமையானது? ஊரார் அனைவருக்கும் உரிமையானது; ஊருணியில் நீர் நிறைந்தால் அவரவர்க்கு வேண்டுமளவு அவரவர் விருப்பம்போல் எடுத்துக் கொள்வர். எவருடைய வேண்டுதலோ தூண்டுதலோ ஊருணி நீரைப் பெறுவ தற்கு வேண்டுவதில்லை. இவர் அவர் என்று பார்த்தும் ஊருணி நீர் வழங்குவது இல்லை. அதுபோல் மிகுந்த அறிவாளிகளின் செல்வம் ஊருக்குப் பொதுவாகப் பயன்படும்.

சுவைமிக்க கனியைத் தரும் மரம் ஒன்று ஊர் நடுவே பழுத்துள்ளது; மிகுதியான பழங்களையும் கொண்டுள்ளது. ஊருக்குப் பொதுவான அம் மரத்தின் பழம் - ஊரின் நடுவே பழுத்துள்ள அம் மரத்தின் பழம் - ஊரார் அனைவருக்கும் பயன்படுமல்லவா! நிழல்தந்த அம்மரம் கனியும் தந்து களிப்பூட்டும் வாய்ப்புப் பெருமைக்குரியதல்லவா! “மரம் பழுத்தால் வௌவாலை வா என்று கூவி, இரந்து அழைப்பார் யாரும் அங்கில்லை” என்பர். ஆதலால் பறவைகளுக்கும் விருந் தளிக்கும் பழமரம் தனிச் சிறப்பினதே யாகும். இப்பழ மரம் போன்றது, நற்குண நற்செயல்களையுடையவர்களது செல்வம்.

இனி, இவ்விரண்டினும் உயர்ந்தது மருந்து மரம்! அம் மருந்து மரத்தின் மாண்பு சொல்லுவார் சொல்லைக் கடந்ததாகும். மருந்துக்குப் பயன்படும் மரத்தின் இலை பறிக்கப்படும்; காய் பறிக்கப்படும்; பழமும் பறிக்கப்படும்; கிளையும் கொப்பும் வெட்டப்படும். அவ்வளவோ? தோலும் உரிக்கப்படும்; வேரும் வெட்டப்படும். அவ்வளவு பொருளும் தந்து தன்னை அழித்தவர் நோயையும் பேரருட் பெருக்கத்தால் தீர்க்கும் பெருமை கொண்டது மருந்து மரம். இம் மருந்து மரம் போன்றது பெருந்தகை மீக்கூர்ந்த பெருமக்கள் செல்வம். தன்னை