உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று இணைப்பு - 2

உ.வே.சாமிநாதர்

தாமோதரனார் மதித்துப் பாராட்டிய பெருமக்களுள் பெரும் பேராசிரியர் உ.வே. சாமிநாதரும் ஒருவர். அவர் 'என்சரிதத்'தில் தாமோதரர் பற்றி எழுதிய குறிப்புகள் சில:

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இராவ்பகதூர் சி.வை. தாமோதரம் பிள்ளை அக்காலத்தில் சென்னையில் இருந்தார். தொல்காப்பியம் முதலிய பழைய நூல்களை அச்சிடும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். வீர சோழியத்தையும் அவர் வெளியிட்டார். பிறகு இறையனாரகப் பொருளுரையையும் திருத்தணிகைப் புராணத்தையும் வெளியிடத் தொடங்கினார். திருவாவடு துறை மடத்தில் பழைய ஏட்டுப் பிரதிகள் இருக்கின்றன என்பதை அறிந்து ஆதீனத் தலைவருக்கு அவற்றை அனுப்ப வேண்டுமென்று விண்ணப்பம் செய்து கொண்டார். சுப்பிரமணிய தேசிகர் அக் கடிதங்களை எனக்குக் காட்டி அவர் விரும்பிய நூற்பிரதிகள் இருக்கின்றனவா என்று தேடிப் பார்க்கச் சொன்னார்.தாமோதரம் பிள்ளை இறையனாரகப் பொருளுரை கேட்டிருந்தார். அதில் 59 ஆவது சூத்திரத்தின் உரையின் பிற்பகுதி தமக்குக் கிடைக்க வில்லை என்றும் கிடைத்தால் அனுப்பவேண்டும் என்றும் எழுதினார்; மடத்திலே தேடிப் பார்த்தபோது இறையனாரகப் பொருளுரையின் பழைய பிரதி ஒன்று அகப்பட்டது. அதில் அந்தச் சூத்திர உரை முற்றும் இருந்தது. உடனே அந்தப் பிரதியைத் தாமோதரம் பிள்ளைக்குச் சுப்பிரமணிய தேசிகர் அனுப்பி வைத்தார்.

தேசிகர் அனுப்புவித்த ஏட்டுப்பிரதி வரும் விஷயத்தைத் தெரிவித்து, தணிகைப் புராணத்தைப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டபோது மதுரை இராமசாமிப் பிள்ளை குறிப்பெடுத்து வைத்திருக்கிறார். அதை உபயோகித்துக் கொள்ளலாம் என்று எழுதி அவற்றை அனுப்பச் செய்தேன். அது வரையில் தாமோதரம் பிள்ளைக்கு நான் கடிதம் எழுதியதில்லை. என் கடிதத்தைக் கண்டவுடன் அவர் மிகவும் மகிழ்ச்சியுற்று எனக்கு ஒரு பதிற் கடிதம் எழுதினார். அதிற் சில பகுதிகள் வருமாறு: