உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

7

எழுந்தருளித் தமிழ்த் தொண்டாற்றினால் சிறக்குமே" என்று சிந்தித்தார். "வருவரோ? வாராரோ?" என்று ஐயுற்றார். அதன்பின் தம்மடத்தின் நிலைமையையும் தம் விருப்பையும் சிவப்பிரகாசரிடம் எடுத்துரைத்து அளவளாவிப் பேசி விடை கொண்டார். அரசப்பர் மொழியும் வேட்கையும் அடிகளுக்கு உவகை தருவனவாக அமைந்தன. அடிகளார், சோழவந்தானை நண்ணினார். அரசப்பர் அளப்பருங் களிப்பு அடைந்தார். அன்று தொட்டுக் கிண்ணிமடம் 'தமிழ்க் கோயில்' ஆயிற்று.

சிவப்பிரகாச அடிகள்

சிவபிரகாசர் ஓர் தமிழ் மலை. அத்தமிழ் மலையில் இலக்கணம், இலக்கியம், சோதிடம், வேதாந்தம், தருக்கம் ஆகியவை பொற் சிகரங்காளாய் அமைந்து பொலிவூட்டின. தனித்தனிச் சிகரங்களிலே தோய்ந்து தோய்ந்து நலம் நுகர்ந்த சுவைஞர் பற்பலர்! அச் சுவைஞர்களுள் ஒருவர் ஆனார்நம் சண்முகனார். இவர், அடிகள் வந்தவுடன், அவர்தம் தமிழ்ப் புலமை வெள்ளத்திலே ஒன்றிப் போயினார். "இத்தகைய மேதைமையும் உண்டா? இவரே தமிழ் மலை; இவரே வழிகாட்டி என உள்ளத்திலே கொண்டார். அதனால் சிவப்பிரகாசராம் செம்மலரிடத்துத் தண் தேன் பருகும் தமிழ் வண்டானார் சண்முகனார். சிவப்பிரகாசர் செந்தமிழ் மலர்; சண்முகனார் செந்தமிழ்த்தும்பி; மலரையும் தும்பியையும் இணைத்தது தமிழ்த்தேன்!

மலரும் வண்டும்

வண்டின் வருகையை நாடுதல் மலரின் இயற்கை. வண்டு மலரின் மதுவை நுகருமாறு தேடுவதும் இயற்கை. நாடவும் தேடவும் வழிசெய்வது நற்றேன். தேனுக்கு ஒன்றுபடுத்துவது இயற்கைத் தன்மை! தமிழ்த் தேனின் இயற்கைத் தன்மையும் அதுவே.

தேசிகரிடத்துக் கற்றுக் கொண்ட கல்விக்குத் தனியொளி தந்தார் சிவப்பிரகாசர்.சண்முகனார்கல்வித் திறனைச் சோதித்தறிந்த அடிகள் எடுத்த எடுப்பிலேயே திருக்குறள் ஆராய்ச்சி, தொல் காப்பிய ஆராய்ச்சி, சங்க இலக்கியப் பாடம் முதலியவற்றிலே புகுந்தார். சோதிட நூல்களையும், மெய்யறிவு நூல்களையும் ஒழிந்தவேளைகளில் கற்பித்தார். சண்முகனாரும் அடிகளும் உருவும் நிழலும் ஆயினர். பகலிலும் இரவிலும் அடிகள் உறையும் மடமே சண்முகனார்க்கு வீடாயிற்று. அடிகளே தாயும் தந்தையும் ஆயினார்.