உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

துன்பமிக்கபதினாறாம் ஆண்டு

சண்முகனார்க்குப் பதினாறாம் ஆண்டுநடந்து கொண்டி ருந்தது. அதுகாறும் புத்தகம், படிப்பு, பாட்டு, ஆராய்ச்சி என்றிருந்தது அன்றி வேறு வேலையொன்றும் செய்தறிந்தார் அல்லர். குடும்பக் கடமைகளை முறைபெற நிறைவேற்ற அரசப்பர் இருந்தார். குடும்பத்திற்கு வாய்த்த அரசரே அவர். செல்வமாய் வளர்த்த மக்களையும், அன்பு மனைவியையும் ஏங்க விட்டுவிட்டு அவர் இயற்கை எய்தினார். அரசப்பர் மறைவு சண்முகனார்க்கு மலையொன்று தலைமீது வீழ்ந்தது போலாயிற்று! பார்வதி யம்மையோ சித்தங்குழம்பி அரற்றினார். அரசப்பர் பிரிவுத்துயர் வீட்டைப் பெரும் புயலாய்க் கொடுஞ்சூறையாய் வாட்டியது.

இன்பமிக்க அரசப்பர் மனைப்படகு துன்ப வெள்ளத்தில் ஆழத் தொடங்கியது. அதற்கு முகாமனோ செல்வந்திரட்டும் வழி வகை எதுவும் அறியாது வளர்ந்துவிட்ட சண்முகனார். இவர் தாமே அரசப்பருக்குத் தலைமகனார்! ஆண்டுகள் ஒன்றிரண்டு டக்கு முன்னமே சுறாவும், கராவும் போன்று வறுமை தன் பாழ்வாயைத் திறக்கத் தொடங்கிற்று. பார்வதியம்மையாரோ தம் பைந்தமிழ்ப் பாவலன் சண்முகத்தின் மீதுள்ள 'சுமை' கண்டு துன்புற்றார். தம் மைந்தர் நலனொன்றே கருத்திற்கொண்டு நிலங்களுக்குச் சென்று நேரடியாகக் கவனித்தார். தன்னலம் எனவொன்று இருப்பதையே அறியாதது அன்றோ உண்மையான தாய்மை!

தந்தையாரின் பிரிவுத் துயரைச் சிறிதுசிறிதாக மாற்றிக் கொண்டுவந்தது சண்முகனாரிடத்துக் குடிகொண்டிருந்த தண்டமிழ்த் தெய்வம். ஆம்! சண்முகனார் மீண்டும் ஓய்வு ஒழிவு இன்றித் தமிழ் அன்னையின் தூய தொண்டரானார். துயரம் துகள்துகள் ஆயின! "என்னை வளர்ப்பது தமிழே" என்னும் உறுதிகொண்டார் ஏந்தல் சண்முகனார். தமிழ்க் கடலிலே மூழ்கி மூழ்கி முத்தெடுக்குந் திறங் கண்டுவிட்ட சண்முகனார்க்கு வறுமை வெள்ளத்தில் எதிரோட்டம் ஓடுவது ஒரு பொருட்டாக இருக்க வில்லை. வறுமைக்கும் வாழ்வுக்கும் கட்டுப்பட்டு இயங்காத கதிர் தன் கடமையில் தவறாது சுழன்றுகொண்டு இருந்தது.ஆண்டுகளும் உருண்டன.சண்முகனார்க்கு அகவை பதினெட்டு ஆயிற்று.

திருமணம்

சோழவந்தானில், தமிழ் மருத்துவத்தில் தனித் திறம் பெற்றவராய்ச் சிதம்பரம்பிள்ளை என்பவர் ஒருவர் இருந்தார்.