உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

11

அவருக்குக் காளியம்மை என்னும் பெயருடைய மகளார் ஒருவர் இருந்தார். அவரைச் சண்முகனார்க்கு வாழ்க்கைத் துணையாக் கினார் பார்வதியம்மையார். மணக்கோலத்தில் மாலை மாற்றிக் கொண்ட சண்முகனார் தமிழன்னைக்கும் ஒருமாலை சூட்டினார். அது பூமாலையன்று! பாமாலை! மாலைமாற்று மாலை என்பது அதன் பெயர், முருகக் கடவுள் மீது பாடப் பெற்றது, ம் மாலைமாற்று மாலையாகும்.

சண்முகனார் வயிற்று வலி நோய்க்கு ஆட்பட்டார். மருந்துகள் பயன்படவில்லை. நோய் நீடித்துச் சென்றது. சண்முகனார்க்கு அரியூர் சாமிநாதையர் என்னும் ஒருவர் நண்பராக இருந்தார். அவர் இவர் நோய்நிலை அறிந்து வருந்தி, "முருகக் கடவுள் மீது பாமாலை பாடின் நோய் நீங்கும்" என்று வற்புறுத்தினார். அதற்கு ஏற்பப் பாடப் பெற்றதே மாலைமாற்று மாலையாகும்.

ம்

புலவனுக்கு வரும் இன்பமும் புதிது படைக்கின்றது. அவனுக்கு வரும் துன்பமும் புதிது படைக்கின்றது. ஆம்! புலமை வெளிப்படுவதற்குத் தூண்டுதல்கள் வேண்டும். அஃது இன்பமாக இருந்தால் என்ன? துன்பமாக இருந்தால்தான் என்ன?

'விகடகவி' என்னுஞ் சொல்லைக் கொண்டு இளைஞர்கள் விளையாட்டுக் காட்டுவது உண்டு.இச்சொல்தொடக்கத்திலிருந்தே அன்றி இறுதியிலிருந்து எழுத்துக் கூட்டிப் படித்தாலும் 'விகடகவி' என்றே வருமாறு அமைந்துளது. இது ஒரு தனிச் சொல். ஆனால் தொடக்கத்திலிருந்து படித்தாலும் இறுதியிலிருந்து படித்தாலும் 'அடி' எத்தகைய மாற்றமும் அடையாதவாறு அமைக்கும் பாடலே மாலைமாற்றாம்.

இத்தகைய மாலை மாற்றுப் பாடல் ஒன்றிரண்டு அமைத்தாரல்லர் கவிஞர் சண்முகனார். ஒரு நூலே யாத்தார். நூலின் இறுதிச் சொல் தொடக்கச் சொல்லாக இருக்குமாறும் பாடினார். அதனால் நூல் 'மாலைமாற்று மாலை' என்னும் பெயர் பெறுவதாயிற்று. மாலை பாடுவது அரிது. மாலைமாற்றுப் பாடுவது அதனினும் அரிது. மாலைமாற்று மாலை பாடுவது அதனினும் அரிது. ஆனால் கவிஞர் சண்முகனார்க்கோ அரிய கவிதை இயற்றலும் எளிதாயிற்று காரணம், கவித் தெய்வத்தின் திருமகனாராகத் திகழ்ந்தார் அவர்.