உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

ஏகபாத நூற்றந்தாதி

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

அகவை இருபது கடக்கவில்லை. சண்முகனார்க்கு; மற்றுமொரு புதிய நூலைப் படைத்தார். அதற்குப் பெயர் ஏகபாத நூற்றந்தாதி. பாடலின் முதல்அடியே, இரண்டாம், மூன்றாம், நான்காம் அடிகளாவும் இருக்கும். ஆனால் அடிஅடிதோறும் பொருள் மட்டும் வேறு வேறாக இருக்கும். ஒவ்வொரு பாட்டின் இறுதியும் அடுத்த பாட்டின் தொடக்கமாக அமையும். இவ்வாறு நூறுபாட்டுகள் பாடினார்.

வேலை வாய்ப்பு

சண்முகனார், புலமை வளம் பெற்று வந்ததற்கு நேர்மாறாகப் பொருள் வளஞ் சுருங்கி இடர்ப்பட்டார். ஏதேனும் தொழில் செய்ய விரும்பினார். மதுரைச் சேதுபதி உயர்பள்ளியில் தமிழராசிரியர் வேலை வாய்த்தது.

அக்காலத்தில் தமிழாசிரியராக ஒருவரை நியமிக்க வேண்டுமானால் அவரைத் தமிழ்ப் புலவர்கள் சிலர் கூடிச் சேர்ந்து பலவாறு சோதனையிட்டுப் பார்ப்பர். ஒரே இடத்திற்குப் பலர் போட்டியிடுவார்கள் ஆயின், அவர்களை வாய்மொழி, எழுத்து எனவிரு திறத்தானும் சோதனை செய்வர். யாதானுமோர், அடியையோ, பொருளையோ தந்து கவியியற்றிக் காட்டுமாறு செய்வர். பலருக்கும் மன நிறைவு ஏற்படுமாறு இருந்தால்தான் வேலை கிடைப்பதற்குப் பரிந்துரை வழங்குவர். காலநிலை இவ்வாறிருந்தும் சண்முகனார் புலமையை முன்னரே அறிந்திருந்த நிர்வாகத்தினர் எத்தகைய சோதனையும் செய்யாமல் வேலை தந்தனர். வேலை ஏற்றுக்கொள்ளுங்காலையில் சண்முகனார்க்கு வயது இருபத்திரண்டே.