உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

17

வைத்தார். அதனுடன், "உடல் நலமின்மையால் இவ்வாண்டிலும் மதுரைச் சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் விடுமுறை பெற்றுக் கொண்டு நாளதுவரை சோழவந்தானில் வசித்து வருகிறேன். இப்போது இன்னிசை இருநூறு எனவொரு நீதிநூல் அடியேன் சிற்றறிவிற்கு எட்டிய அளவில்பாடிச் சிறிதும் நாணாது பெரியீரது திருமுன்புக்குப் புத்தக அஞ்சல் செய்து அனுப்பியிருக்கிறேன். அரிய பெரிய சங்கநூலெல்லாம் ஆராய்ந்த பெரியீருக்கு இதுமிக்க அருவருப்பைத் தருமாயினும், சிறிது கடைக்கண் நோக்குச் செய்தருளித் திருத்த வேண்டின் திருத்தியும், நீக்க வேண்டின் நீக்கியும் சேர்க்க வேண்டின் சேர்த்தும் அனுப்பினால் உடனே அச்சிடுவதற்கு இவண் அநேகர் எதிர்பார்த்திருக்கின்றனர். பெரியீரிடத்துப் பாயிரம் பெறல்வேண்டும் என்பது அடியேனது அவா' என்று கடிதமொன்றும் எழுதிவைத்தார். என்னே சண்முகனாரின் பணிவுடைமை! முற்றிய நெற்கதிர் தலை தாழ்கின்றது; முற்றாப் பதர்க் கதிர்கள் நிமிர்ந்து நிற்கின்றன" என்பதற்கு வேறென்ன சான்று வேண்டும்?

பண்டிதமணி கதிரேசச்செட்டியார்

சண்முகனார் மதுரைக்கு வந்தபின் அவர் திறமும், ஆராய்ச்சியும் வெளியிடங்களிலும் பரவத் தொடங்கின. அடிகளின் மாணவர்களாக இருந்த பலரும், சண்முகனார் உடன்பின்ற சிலரும் வெவ்றுே இடங்களிலிருந்து தமிழ்த் தொண்டாற்றிக் கொண்டுவந்தனர். ஆகவே அவர்கள் வழியாகக் கற்றோர் கூடிய அவையில் சண்முகானர் புகழ் பரவத் தொடங்கிற்று. இவ்வாறு பரவிய இடங்களில் தலையாயது செட்டிநாட்டுச் சீமை எனலாம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பறை முழக்கிய பாவலர் கணியன் பூங்குன்றன் பிறந்த பூங்குன்றம் என்னும் ஊர் செட்டிநாட்டைச் சேர்ந்த மகிபாலன்பட்டியே யாகும். இம் மகிபாலன் பட்டியிலே பிறந்திருந்த பெரும்புலவர் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் ஆவர். அவர் சோழவந்தானிலிருந்து கிளர்ந்தநறும்பூந் தமிழ்த் தென்றலின் நயநுகர விரும்பிய சுவைஞர் ஆனார். அதனால் இயற்கைப் புலமையும், இருமொழித்திறமும், நுண்ணறிவும், கவியாக்கமும் நிரம்பியிருந்த அவர் சண்முகனாரை, என்றுகொலோ கண்குளிரக் காணு நாளே" என்று விரும்பிக் கிடந்தார்.

5

1.

புறநானூறு 192