உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

தமிழ் கற்காதிருந்துங்கூட "இவர் எமக்கு ஆசிரியர்" என்று கூறினார். சண்முகனாரை மாணவர் அவையிடைப் பேசுமாறு வேண்டினார்.

அடிகள் வேண்டுகோட்படி அரிய சில செய்திகளை மாணவர்கள் வியக்குமாறு சண்முகனார் பேசினார். இவர் ஆசிரியராக இங்குவரின் சிறப்பாக இருக்குமே என்று மாணவர்கள் விரும்பியுரைக்குமாறு பேச்சு, பொலிவுடையதாக இருந்தது.

அதன்பின் அடிகள், சண்முகனாரைத் தம் கல்லூரித் தலைவராக இருந்த மில்லர் துரைமகனாரிடம் அழைத்துச் சென்றார். இவர் திறமையினை எடுத்துரைத்து கல்லூரியில் வேலை தந்துதவுமாறு வேண்டினார். மில்லர் துரைமகனாரும் அடிகளார் மாட்டுக் கொண்டிருந்த அன்பினால் மறுக்காத வராய் உடனே வேலை தர ஒப்புதல் தந்தார். ஒப்புதல் அளித்தபின், 'இவருக்கு ஆங்கிலம் தெரியுமா?” என்று கேட்டார். “தெரியாது” என்றார் அடிகள்.

னி

"இப்பொழுது ஆங்கிலம் தெரியாதது பற்றி ஒன்று மில்லை. இனியேனும் இவர் ஆங்கிலம் கற்றுக்கொள்ள இசைய வேண்டும்" என்று கூறினார். “சரி அவ்வாறே கற்றுக் கொள்வார்" என்றார் அடிகள். ஆனால்உரையாடலைக் கேட்டு அறிந்த சண்முகனார் வேலை ஒன்றே கருதி "ஆகட்டும்" என்று ஒப்புக் கொண்டு விடவில்லை. "எனக்கு வயது ஆகிவிட்டது. இனி ஆங்கிலம் கற்றுக் கொள்ள என்னால் இயலாது. கற்கவும் விருப்பு இல்லை" என்று மறுத்துக் கூறினார். இது கட்டாயம் அன்று; வேலையை ஏற்றுக்கொள்ளுங்கள்; பின்னர் வாய்ப்புப் போல் செய்து கொள்ளலாம்" என்று அடிகள் பன்முறை வற்புறுத்தினார். எனினும் சண்முகனார் ஏற்றுக் கொள்ளவில்லை. "என்னால் முடியாததை முடியும் என்று ஒப்புக் கொள்ள முடியாது" என மறுத்துவிட்டார். சண்முகனார் செம்மை இது!

1.நாலடியார், 137