உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பேராசிரியர் சண்முகனார்

சண்முகனார் நுண்மதியையும், அவர் வேலையினின்று விலகிச் சோழவந்தானிலே இருந்து வருவதையும் கேள்வி வழியாக அறிந்தார்தமிழ்ச் சங்கத் தலைவர் பாண்டித் துரைத்தேவர்; சண்முகனாரை அழைத்து வருமாறு ஆளனுப்பினார். பாண்டித் துரைத் தேவரை நன்கறிந்து அவர்பால் பேரன்பு கொண்டிருந்த புலவர் சண்முகனார் இவ்வழைப்பினைத் தமிழம்மையின் அழைப்பாகக் கருதிக் கொண்டு மதுரை மாநகருக்கு வந்தார். சங்கத்திற்குச் சென்று தேவரைச் சந்தித்தார். சண்முகனார் தமிழ்க் கல்லூரிப் பேராசிரியர்களுள் ஒருவரானார்.

சங்கத்தின் தலைமைப் பேராசிரியராகத் திரு நாராயண ஐயங்கார் திகழ்ந்தார். பெரும் புலவர்களாம்ரா.இராகவ ஐயங்கார் மூ.இராகவ ஐயங்கார், மு. ரா. கந்தசாமிக் கவிராயர் ஆகியோர் சங்கத்தின் பல திறப்பணிகளைக் கவனித்து வந்தனர். சண்முகனார்க்குப் பண்டித வகுப்பு மாணவர்களுக்குப் பாடஞ் சொல்லித்தரும் பணி விருப்புக்குரியதாக ஆயிற்று.உயர்நிலைப் பள்ளி அளவினைப் பார்க்கிலும் தமிழ்க் கல்லூரி மாணவர் களுக்குத் தம் ஆராய்ச்சிப் புலமையைக் காட்டிப் பாடம் நடத்த வாய்ப்பு இருந்திருக்கு மல்லவா!

எழுத்துப் பணியும் இடையூறும்

சண்முகனார் சங்கப் பேராசிரியப் பணி ஏற்றவுடனே முன்னர்த் தாம் எழுத உறுதி செய்திருந்த தொல்காப்பிய உரையை எழுதி முடிக்க 'இதுவே தக்க சமயம் என என நினைத்தார். அந்நினைவின் படியே சுபகிருது யாண்டு பங்குனித் திங்கள் உத்தர நாளில்(14-3-1903) தொடங்கினார். ஆனால் விரைந்து எழுதி முடிக்க முடியவில்லை. நோய் பெரிதும் வாட்டத் தொடங்கிற்று. இதனைச் சண்முகனார், "இடை இடையுற்றுக் கிடைகொளச் செய்த பிணியினாலும் அணி அணியாக வந்து தடைபல செய்த மிடியெனும் படையினாலும் இடையூறு நேர்ந்தமையின் இது பொழுது முடிந்தன பாயிரமும், நூன்மரபும், மொழிமரபும் என மூன்றே.பிறப்பியல் எழுதப்படுகின்றது." என்று எழுதுகின்றார்.