உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

கூரறிவுநோக்கி மதித்தொழுகும் ஆசிரியர் எத்துணையர்? சண்முகனார் சிறப்புக்கு மேலும் சிறப்பளிப்பதன்றோ இப்பண்பு? பண்டிதமணியுடன் மகிபாலன்பட்டிக்குச் சண்முகனார் பன்முறை போனார்; பன்னாட்கள் தங்கினார்; கல்வியும் செல்வமும் ஒரு நிலையில் பெருகியிருந்த பண்டிதமணியின் அன்பில் மூழ்கி யிருந்தார். இச்சந்திப்புகள் இருவருக்கும் பேரின்பமும் பெரும் பயனும் உண்டாக்கின.

கந்தசாமிக் கவிராயர்

சண்முகனார் சங்கக் கலாசாலைக்கு வந்த காலந்தொட்டுக் கந்தசாமிக் கவிராயர் உற்ற நண்பரானார். இவர்கள் அன்பு வேற்றுமையற்ற உடன்பிறப்பாளர் என்னும் நிலையைத் தோற்றுவிக்கத் தவறவில்லை. "தருவளர்சனகைப் பதியும்என் உளமும் சார்ந்துவாழ் சண்முகன் நாமத்தொரு பெரும் புலவன்" என்று சண்முகனாரை உள்ளத்தே கொண்டொழுகிய உயிரன்பை உரையால் எப்படிக் கட்டுவது! சண்முகனார் முட்டுப் பாடுற்ற நேரங்களிலெல்லாம் கவிராயர் முன்வந்து பொருளுதவி செய்ததுண்டு. செல்வப் பொருள் கொண்டும்புலவரைப் புலவர் போற்றி வாழ்தல் உண்டு என்பது வரலாற்றில் காணற்கு அரிய செயல் அல்லவா!

புகழ் பரவுதல்

சண்முகனார் புகழ் மேலும் மேலும் பரவத் தொடங்கியது. ஆராய்ச்சி நுண்மையும் பலரால் போற்றப்பட்டது. இவர்கண்ட தொல்காப்பிய, திருக்குறள் புத்துரைகளைக் கேட்குமாறு கருதிய அன்பர் பலர் அவரவர் ஊர்கட்கு அழைத்துப் பேசச்செய்து பெருமைப்படுத்தினர். இவர் ஆராய்ச்சியுரைகளை மு. ரா. கந்தசாமிக் கவிராயர் நடத்திவந்த விவேகபானு இதழும்,சி.வை. தாமோதரம் பிள்ளை நடத்திவந்த ஞானசித்தி இதழும், மறைமலையடிகளார் நடத்திவந்தஞானசாகரம் இதழும், மதுரைத் தமிழ்ச் சங்கத்தினின்று வெளிவந்த செந்தமிழ் இதழும் விருப்புடன் வெளியிட்டுப் பெருமையுற்றன. ஆராய்ச்சியுரைகள் செய்தித் தாள்களின் வழியாக வெளிவரத் தொடங்கியவுடன் சண்முகனாரைப் போற்றுவோரும். தூற்றுவோரும் பலர் பலர் ஆயினர். போற்றுவோர் போற்றட்டும்; தூற்றுவோரும் பலர் பலர் ஆயினர். "போற்றுவோர் போற்றட்டும்; புழுதிவாரித் தூற்றுவோர் தூற்றட்டும்' என்று பொறுமையுடன் தம் கடப்பாட்டினை வழுவாது செய்துகொண்டு வந்தார். இடைஇடையே சிலநூல்களும் இயற்றினார்.