உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்புலவர் அரசஞ் சண்முகனார்

தாள் எழுத்தே தலையெழுத்து ஆயது

45

முப்பது நாட்கள் கழியவில்லை. அந்தோ! சண்முகனார் படுத்த படுக்கையானார், எல்லாம் துறந்திருந்த சிவப்பிரகாச அடிகளையும் துடிக்குமாறு செய்தது சண்முகனார் படுக்கை. மாணவர் நலமுற மருந்து வகைகளைத் தேடித் தேடிக் கொணர்ந்தார் அடிகள். இரவு பகல்என்று பாராது மருத்து வத்திலே தோய்ந்திருந்தார். ஒருநாள் காலையில் மருந்தும் கையுமாய்த் தெரு வழியே வந்து கொண்டிருந்தார் அடிகள். அப்பொழுது கேள்விப்பட்டார். "சண்முகனார் மண்ணுலக வாழ்வை நீத்தார்” என்று அந்தோ! அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தார். சண்முகனார் இறந்திருக்க மாட்டார் என்பது அவர் எண்ணம். ஆமாம்! சண்முகனார் காலை இளஞாயிறுதாம். கடும்பகல் எல்லை கூட எய்தாதவர் தாம். எனினும் இருட்படலம் சூழ்ந்து கொண்டது. அடிகள் கண்கள் குளங்கள் ஆயின. கன்னங்கள் வடிகால்கள் ஆயின. துறவிநிலை இவ்வாறாயின் மற்றையோர்நிலை யாதாக இருக்கும்?

அருமை அருமையான ஆராய்ச்சிகளைச் செய்து வந்த நுண்ணறிவு அடங்கி விட்டது! கேட்டார் வியக்கக் கேளாரும் நயக்க உரைக்கும் நா அமைந்து விட்டது; வாய் ஒடுங்கி விட்டது. எத்தனை எத்தனை எதிர்ப்புரை கிளம்பினும் அலுப்புச் சலிப்பு இன்றி எழுதி எழுதிக் குவித்த கை ஓய்ந்து விட்டது. தமிழ் மடந்தை வான்துயர்கூர, அண்ணல் சண்முகனார் 1915 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் பதினொன்றாம் நாள் (ஆனந்தவருடம் மார்கழி மாதம் 28 தேதி) புகழ்வடிவானார்.

சண்முகனார் மறைந்த செய்தி கேட்டுத் துடிதுடித்தார் பண்டிதமணி. “அருமை ஆசானை இழந்து விட்டேன் யான்; தமிழகம் தனியொரு புலவனை இழந்து விட்டது" என்று அரற்றினார்.

கரந்தைக் கவியரசு, அரங்க வேங்கடாசலம் பிள்ளை உண்மை அன்பனை, உயர் தமிழனை இழந்துவிட்டமை குறித்துக் கையறு நிலை பாடிக் கசிந்து உருகினார்.

எனக்கு இரங்கல் பாட வேண்டிய சண்முகனார்க்கு நானோ இரங்கல் பாட என்று புலம்பினார் சிவப்பிரகாச அடிகள்.

சண்முகனாரின் அன்னை பார்வதியம்மையும், மனைவி காளியம்மையும் ஆறாத் துயருக்கு ஆளாயினர் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? எல்லோரும் துன்புற்றார்கள் என்றால்