உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

சிவப்பிரகாசர்துன்பச் சேற்றிலே ஆழ்ந்துவிட்டார் எனலாம். மானமே உயிரெனக் கொண்ட மாணவன் உயிர்நீத்தது அறிந்து தம்முயிரும் நித்த ஆசான் பொய்கையார் ஒருவரே உலகில் பிறந்தார் என்னும் உரையைப் பொய்யாக்குவேன் என்று உறுதி கொண்டு விட்டாரா சிவப்பிரகாச அடிகள்?

சண்முகனார் உடலம் சுடுகாடு சென்றதுதான்! அங்குத் தீ மூண்டு எரிவதைக் கேட்டுக் கசிந்தழுது கண்ணீர் பெருக்கினார். மாணவன் பிரிவு மாறா நோய் ஆய்விட்டது. 50 நாள்கள் கடந்தன. அடிகள் சண்முகனார் சென்ற வழியிலே நடந்துவிட்டார். தகவுடையார் கண்ணீர் விட்டு அழுமாறு சாவும் சாவே ஒருவருக்கு வேண்டும். அத்தகைய சாக்காடு இரந்தும் பெறுதற்குரியது என்பது அறநூற் கட்டளை. ஆனால், அன்பொன்றே கருதித் தம்மிற் பெரியராம் அடிகளே தம் உயிர் கொண்டு இவர் உயிர் தேடினாற்போல் இறக்க என்ன பேறு பெற்றிருக்க வேண்டும்!

குறைந்த நாள்களே சண்முகனார் வாழ்ந்தார். ஆனால் நிறைநாள் வாழ்ந்தோரும் செய்வற்கரிய செயல்களைச் செய்து முடித்து ஓய்வு கொண்டார். வேறென்ன வேண்டும்? சண்முகனார் புகழ் வாழ்க!

1. திருக்குறள்,780