உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடல்

7. வாழ்க்கைக் குறிப்புகள்

சண்முகனார் உடல்ஒல்லியானது; நெட்டை என்றோ குட்டை என்றோ கூற முடியாத உயரம்; செந்நிறம்; பேணி வளர்க்கப் படாத மீசை; வரன்முறையாக மழித்தலை அறியாத முகம்; குடுமித் தலை; ஒளியுடைய கூரிய கண்கள்; வரிசையான, காவிக்கறை ஏறாத அழகிய பற்கள்; சற்று நீண்டு குடைந்த காது; காற்று வெயில் குளிர் இவற்றுக்கு மறைப்பு அறியாத மார்பு; நீண்ட கைகள்; விரைந்து நடக்கும் கால்கள்; ஒற்றைச்சுற்று வேட்டி; கழுத்தைச் சுற்றிச் சுருண்டு தொங்கும் நீளத்துண்டு - பொதுவில் தமிழகத்து உழவர் திருக்கோலம். இவை சண்முகனார் உடலைப் பற்றிய குறிப்புகள்.

உள்ளம்

தமக்கு உதவி புரிந்தவர்களைச் சண்முகனார் என்றும் மறவார்; வாய்ப்பு நேரும் பொழுதெல்லாம் உதவியுரைத்தலைக் கடப்பாடாகக் கொள்வார்; தொல்காப்பியப் பாயிரவிருத்தியில் எழுதியுள்ள "நன்றியுரைத்தல்" என்னும் பகுதி ஒன்றே இவர் நன்றியறிதலுக்குச் சான்றாதற்குப் போதுமானது; இவர்தம் வள்ளன்மை, அம்பலவாண தேசிகர் அளித்த பட்டாடை யினைப் பஞ்சைப் பெண்மணிக்கு அளித்தமையாலும், சங்க வளர்ச்சிக்காகத் தங்க வளையல் தந்தமையாலும் புலனாகும்; எளிமையை விரும்பும் இவர் உளப்பாங்கை இவர் உருவம் காட்டாநிற்கும்; களங்கமற்ற வெள்ளை யுளத்தினர் என்பதை இவரொடு பழகிய அன்பர்கள் உரை தெளிவிக்கும்; மற்றைப் புலவர்களை மதித்து ஒழுகுதலைஇவர் புலமையாளர்கட்கு எழுதிய கடிதங்கள் புலப்படுத்தும்; உண்மையை உரைக்க அஞ்சா உளத்திண்மையை இவர்கட்டுரைகள் காட்டும்; கடவுளன்பும், பொதுநல நாட்டமும் உடையார் என்பதை இவர் தம் கவிதை நூல்கள் அனைத்தும் தெள்ளிதின் நிறுவும். வறுமைத் துயருக்காக வாழுநெறி பிழையாமையை வரலாறு முழுவதும் அறைகூவும்.