உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 21.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

இளங்குமரனார் தமிழ் வளம் - 21

சிந்தனை

சண்முகனார் சிந்தனையில் மூழ்கினால் பசியறியார்; நீர்வேட்கை அறியார்; உலாவுதலையோ உறங்குதலையோ அறியார்; வீட்டின் முன் திண்ணையிலே குப்புறப் படுத்துக் கொண்டும், உருண்டு புரண்டு கொண்டும் மணிக் கணக்காகக் கிடப்பார். அங்கு வருபவரைப் பற்றியோ, உட்கார்ந்திருப் பவரைப் பற்றியோ வீட்டைப் பற்றியோ கவலை சிறிதும் கொள்ளார். ஆராய்ச்சியின் போது அவர் உலகமே தனி உலகம்! அதனிடையில்அவர் மனைவியரும் நடைபோட முடியாது. "சாப்பிட வாருங்கள், நேரமாகிறது! உலர்ந்துபோகும்; பசிக்காதா?" இக்குரல்கள் அணு அணுவாய் ஓங்கி உச்சநிலை அடையும். அதன்பின், "சாப்பிட்டுத் தொலைக்க வேண்டும்; எப்போதும் இதே கூப்பாடு; பசி எடுத்தால்எனக்குச் சாப்பிடத் தெரியாதா?" என்னும் துயர ஒலியை எழுப்பிக் கொண்டன்றி விருப்பொடு உணவுக்குச் செல்லார். இரவில்படுத்திருந்தாலும் தலைப்பக்கத்தே தாளும் எழுதுகோலும் இருக்கவே செய்யும். அணையா விளக்கொன்று பக்கத்தே எரிந்து கொண்டிருக்கும் அதனை அணைக்கவே கூடாது. எவரேனும் அணைத்து விட்டால்சினம் பொங்கி எழும்; விளக்கு எந்நேரமும் வளரும்; சுருங்கும்; அதற்கு நேரம் பொழுது இல்லை; இவர்எழுத்துக்கு நேரம் பொழுது இருந்தால் தானே; இரவெல்லாம்விழிப்பார்; பகலிலும் விழிப்பார்; பல நாள்கள் வேலை எதுவுமே அற்றுத் திண்ணையிலும் கட்டிலிலும்புரண்டு கொண்டு ஆராய்வதும் எழுதுவதும், பாட்டியற்றுவதும் இயல்பாய் நடைபெறும் நிகழ்ச்சி.

இவருரைக்கு

மறுப்புரை ஒன்று வந்துவிட்டால் மண்டையை உடைத்துக் கொண்டு சிந்திப்பார். மறுப்புரையைக் கொண்டே மறுக்குமாறு துருவுவார். நூல் ஒன்றையும் திருப்பாது மனத்திலேயே வரவழைத்து வரவழைத்துக் குறித்துக் கொள்வார், பின்னர் முறைப்படுத்தி எழுதுவார். மறுப்புக்கு மறுப்பு விட்டால்தான் ஓய்வு உலாவுதல் - உணவு எல்லாம். அதுவரை குளிப்பது பற்றிக் கூடக் கவலைப்படார். நோய்த் தொல்லை பெருகும்; ஆனால் மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்து விட்டால்நோய் பறந்துவிடும். ஆராய்ச்சிகள் பெரும்பாலனவும் நோயின் இடையே எழுந்தவையே என்பது குறிப்பிடற்கு உரியது.